MS Dhoni: இந்த ஆண்டு பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம்.. சென்னை அணி குறித்து எம்.எஸ்.தோனி கருத்து!
Dhoni on CSK's Failure: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக செயல்பட்டு, மும்பைக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. காயம் காரணமாக ருதுராஜ் விலகியதைத் தொடர்ந்து தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். தோல்விக்குப் பிறகு தோனி, அடுத்த சீசனில் வெற்றி பெறுவதற்கான கூட்டணிகளை உருவாக்க கவனம் செலுத்துவோம் எனக் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி
ஐபிஎல் 2025 (IPL 2025) நேற்று அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. இது மட்டுமின்றி, இந்த ஐபிஎல் 2025 சீசன் முழுவதும் சென்னை சூப்பர் அணி மிகவும் மோசமாக செயல்பட்டது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது அணி செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.
தோல்வி குறித்து எம்.எஸ்.தோனி கருத்து:
மும்பை அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு எம்.எஸ்.தோனி கூறுகையில், “ஐபிஎல் 2025ல் நமக்கு எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் ஒரு சில போட்டிகளில் தோல்வியடைந்தால், அடுத்த ஆண்டுக்கு சரியான கூட்டணிகளை தயார் செய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
எம்.எஸ்.தோனி பேட்டி:
MS DHONI: “We will take one game at a time. Look at the combinations for the next season, if we don’t qualify.”
Thala gave up for this season 💔 pic.twitter.com/CgUKb2Eedk
— Dinda Academy (@academy_dinda) April 20, 2025
நாங்கள் அதிக வீரர்களை மாற்றுவதை விரும்பவில்லை. இப்போது முதல் பிளே ஆஃப்களுக்கு தகுதி பெறுவது குறித்து முயற்சிக்க வேண்டும். இது எங்களுக்கு முக்கியம். ஆனால், அது நடக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டுக்கு சரியான 11 வீரர்களை தயார்படுத்தி, பின்னர் வலுவாக மீண்டு வர கவனம் செலுத்துவோம்.” என்று தெரிவித்தார்.
மும்பை அணிக்கு எதிராக தோல்வி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2025 சீசனில் காயம் காரணமாக முழுவதுமாக விலகினார். இதன்பிறகு, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்றார். இதன் தொடர்ச்சியாக, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி, ஐபிஎல் 2025ல் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3ல் 2 தோல்விகளை சந்தித்தது. மும்பை அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.