கேம் சேஞ்சராக மாறிய கே.எல்.ராகுல் – பெங்களூரை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!
DC Defeats RCB by 6 Wickets: கே.எல்.ராகுலின் நிதானமான ஆட்டத்தால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிய வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் தனது அதிரடி ஆட்டத்தால் அணிக்கு வெற்றி தேடி தந்திருக்கிறார் கே.எல்.ராகுல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ்
ஐபிஎல் (IPL) 2025 ஆனது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என ஓரளவுக்கு தெரிந்துவிடும். சென்னை சூப்பர் கிங்ஸை (Chennai Super Kings) பொறுத்தவரை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் ஏப்ரல் 11, 2025 அன்று நடைபெறவிருக்கிற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு இடையிலான போட்டியில் கேப்டனாக தோனி பங்கேற்கவிருக்கிறார். இதற்கிடையில் ஏப்ரல் 10, 2025 அன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengalore) அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஃபில் சால்ட் 17 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகள் என 37 ரன்கள் எடுத்து விப்ராஜ் நிகம் பந்து வீச்சில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து படிக்கல் 1 ரன்னிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 14 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுண்டரி என 22 ரன்களுடனும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த வீரர்களும் டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன்கள் சேர்க்க மிகவும் திணறினர்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் நிதானமாக ஆடி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர் என 37 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும் மோகித் சர்மா, அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்களூருவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய டெல்லி
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் டு ஃபிளெஸ்ஸிஸ் 2 ரன்களுடனும் ஜேக் பிரேசர்-மெக்கர்க் 7 ரன்களுடனும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். அதற்கு அடுத்து வந்த இம்பேக்ட் பிளேயரான அபிஷேக் போரெல், புவனேஷ்வர் குமார் பந்தில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, டெல்லி அணி தடுமாறியது.
கேம் சேஞ்சராக மாறிய கே.எல்.ராகுல்
அப்போது களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அக்சர் படேல் 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த திரஸ்டன் ஸ்டப்ஸ், கே.எல்.ராகுலுக்கு கம்பெனி கொடுக்க அணியின் ரன்கள் மெல்ல உயர்ந்தது. எவ்வளவு முயற்சித்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை பெங்களூர் அணியால் பிரிக்க முடியவில்லை.
யஷ் தயாள் வீசிய 18வது ஓவரில் முதல் இரண்டு பந்தில் கேஎல் ராகுலும், ஸ்டெப்ஸும் ஆளுக்கு 1 ரன்கள் எடுத்தனர். 3வது பந்தில் கே.எல்.ராகுல் 6 மற்றும் 4வது பந்தில் 4 ரன்களும் எடுத்தார். இதனால் பதட்டமான யஷ் தயாள் பதட்டத்தில் 5 வைட்களை வீசினார். கூடுதலாக டெல்லி அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது. இதனையடுத்து 5 வது பந்தில் கே.எல்.ராகுல் சிக்ஸ் அடிக்க 18 வது ஓவரிலேயே டெல்லி இலக்கை எட்டியது. இதனையடுத்து 13 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.