KKR v PBKS : ஈடன் கார்டனில் அதிரடி காட்டிய மழை – போட்டி ரத்து!
KKRvPBKS: ஐபிஎல் 2025ல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் குவித்தது. கொல்கத்தா களமிறங்கிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஐபிஎல் 2025 (IPL) இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கு இடையிலான போட்டி எந்த முடிவும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 26, 2025 சனிக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முன்னால் ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிரியன்ஸ் ஆர்யா 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 69 ரன்கள் குவித்தார். அவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் என 83 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் சார்பாக வைபவ் ஆர்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்க்த்தா இன்னிங்ஸ் தொடங்கியவுடன், மழை குறுக்கிட்டது, சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகு, நடுவர்கள் இறுதியாக போட்டியை ரத்து செய்ய முடிவு செய்தனர். இந்த சீசனில் ஒரு போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த முடிவு கொல்கத்தாவிற்கு பிரச்னைகளை அதிகரித்துள்ளது.
ரசிகர்கள் இல்லாமல் கலையிழந்த ஈடன் கார்டன்
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் அதிக அளவில் போட்டியைக் காண வரவில்லை. மைதானம் முழுமையாக நிரம்பவில்லை. இந்தக் காட்சி இந்த சீசனிலும் முன்னதாகவே காணப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், கொல்கத்தா அணி எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடமிருந்து ஆதரவைப் பெறவில்லை. வந்திருந்த பார்வையாளர்களை பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அமைதியாக உட்கார வைத்தனர். இந்த சீசனில், இந்த இரண்டு இளம் தொடக்க வீரர்கள் பஞ்சாப் அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அளித்து பவர் பிளேயில் நல்ல ரன்களை வழங்குகின்றனர்.
பிரியான்ஷ் – பிரப்சிம்ரனின் அதிரடி பேட்டிங்
பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா (69 ரன்கள்), மீண்டும் ஒருமுறை அதிரடியாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை மள மளவென உயர்த்தினார். பவர்பிளேயில் அவர் பிரப்சிம்ரனுடன் இணைந்து அணிக்காக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். பிரியான்ஷ் வெறும் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவர் இரண்டாவது முறையாக அரை சதம் அடிக்கிறார்.
மறுபுறம், பிரப்சிம்ரன் சிங்கும் ஒரு அற்புதமான அரைசதம் அடித்தார். பிரியான்ஷ் அவுட் ஆனபோது, 11.5 ஓவர்களில் இருவருக்கும் இடையே 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. இதன் பிறகு பிரப்சிம்ரன் தாக்குதல் நடத்தி 83 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இதன் அடிப்படையில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது.
மழையால் போட்டி ரத்து
கொல்கத்தாவின் இன்னிங்ஸின் முதல் ஓவர் முடிந்தவுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மழை நிற்கவில்லை. இறுதியாக, இரவு 11 மணியளவில், நடுவர்கள் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதன் காரணமாக இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பயனடைந்தது, அந்த அணி 11 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் கொல்கத்தா அணி 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.