SRH vs PBKS: ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே மோதல்.. ஐபிஎல் போட்டியில் பரபரப்பு!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இடையே வார்த்தை மோதல் நிகழ்ந்தது. சர்வதேச அளவில் ஒரே அணியில் விளையாடும் வீரர்களிடையே ஏற்பட்ட இந்தச் சம்பவம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிராவிஸ் ஹெட் - மேக்ஸ்வெல் இடையே வார்த்தை மோதல்
ஐபிஎல் தொடரில் (IPL 2025) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு போட்டிகள் என்றாலே பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது. களத்தில் ஒரு பக்கம் திறமையை காட்டுவது நிகழ்ந்தாலும் இன்னொரு பக்கம் வார்த்தை போர், கைகலப்பு உள்ளிட்டவற்றிலும் ஈடுபட தயங்க மாட்டார்கள். நன்றாக விளையாடும் எதிரணி வீரரின் மனதில் குழப்பம், கோபம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்போது அவர் தனது நிலையில் இருந்து தவறுவார் என்ற கணக்கில் இதுபோன்ற யுக்தியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் நடைபெற்றது.
ஆனால் ஒரு போட்டி என்றால் எதிர் எதிர் அணியினரைச் சேர்ந்த வீரர்கள் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால் இங்கு சர்வதேச அளவில் ஒரே அணியில் விளையாடும் வீரர்கள் இருவர் மோதிக் கொண்டது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள்.
மேட்ச் விவரம்
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 27வது போட்டி நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. அதன்படி களம் கண்ட அந்த அணியில் பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்கள், பிரப் சிம்ரன்சிங் 42 ரன்கள், நெகல் வெதரா 27 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் விளாச 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் பஞ்சாப் பந்துவீச்சை பொளந்து கட்டினர். பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய வண்ணம் இருந்த இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். டிராவிஸ் ஹெட் 66 ரன்கள் எடுத்தார்.
நடந்தது என்ன?
Two Aussies are fighting on the field .
Heated moment between Glen Maxwell and Travis Head .#SRHvsPBKSpic.twitter.com/vhgTxwtFDL
— Surbhi (@SurrbhiM) April 12, 2025
இப்படியான நிலையில் பஞ்சாப் அணியின் 9வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கிளென் மேக்ஸ்வெல் வீசினார். அப்போது அதில் மூன்றாவது, நான்காவது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு அடிக்க முயற்சித்த நிலையில் அது நேராக மேக்ஸ்வெல் கைக்கு சென்றது. அவர் உடனடியாக விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். இதனை பேட்டிங் முனையில் நின்ற ஹெட் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவரை நோக்கி ஆக்ரோஷமாக ஏதோ சொன்னார். மேக்ஸ்வெல் அந்த ஓவரின் கடைசி பந்தை வீச அதில் ரன் எடுக்கப்படவில்லை. இதனால் பேட்டர்கள் இருவரும் தங்கள் முனைகளை மாற்றிக் கொண்டனர். அப்போது மேக்ஸ்வெல்லிடம் டிராவிஸ் ஹெட் மீண்டும் கோபமாக ஏதோ சொன்னார். ஆனால் மேக்ஸ்வெல் அதனை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். அதற்கு கள நடுவர் தலையிட்டு ஹெட்டை சமாதானம் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.