IPL 2025: கடைசி வாய்ப்பு! என்ன செய்யப்போகிறது ராஜஸ்தான்..? தாக்குதலை கொடுக்குமா குஜராத்?

RR vs GT Match 47 Preview: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 28, 2025) ஜெய்ப்பூரில் மோதுகின்றன. இது ராஜஸ்தானுக்கு 'செய் அல்லது செத்துமடி' போட்டியாகும். சவாய் மான் சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தானை 6 முறை வீழ்த்தியுள்ளது. வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025: கடைசி வாய்ப்பு! என்ன செய்யப்போகிறது ராஜஸ்தான்..? தாக்குதலை கொடுக்குமா குஜராத்?

சுப்மன் கில் - சஞ்சு சாம்சன்

Updated On: 

28 Apr 2025 10:56 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 47வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 28ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை செய் அல்லது செத்துமடி போட்டியாகும். ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று தோற்றால், ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படும் முதல் அணியாக மாறக்கூடும். இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்ற முயற்சிக்கும்.

பிட்ச் எப்படி..?

சவாய் மான் சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்கும்.இந்த பிட்சானது பொதுவாக மெதுவாக இருக்கும். ஸ்லோ பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். ஐபிஎல் 2025ல் இதுவரை இங்கு நடைபெற்ற 2 போட்டிகளில் ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மற்றொன்றில் சேசிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடந்த கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐ 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் சவாட் மான் சிங் ஸ்டேடியத்தில் இதுவரை 59 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 21 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த அணி 38 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது நல்லது.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 7 முறை மட்டுமே நேருக்குநேர் மோதியுள்ளது. அந்த போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

வானிலை நிலவரம்:

ஏப்ரல் 28, 2025ம் தேதியான இன்று ஜெய்ப்பூரில் வானிலை மிகவும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின்போது வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். அதேநேரத்தில் ஈரப்பதம் என்பது வெறும் 11 சதவீதம் மட்டுமே இருக்கும். வானம் தெளிவாக இருக்கும் என்பதால் மழைக்கு வாய்ப்பு இல்லை.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுபம் துபே, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகிஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா