RR vs RCB: சால்ட் செய்த சம்பவம்.. விரட்டிய விராட் கோலி.. ராஜஸ்தானை எளிதாக வீழ்த்திய பெங்களூரு!
IPL 2025: ஐபிஎல் 2025 இன் 28வது போட்டியில், பெங்களூரு அணி ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி 173 ரன்கள் எடுத்தது, அதேசமயம் விராட் கோலி (62) மற்றும் பில் சால்ட் (65) ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணியின் வெற்றி வரிசை தொடர்கிறது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 28வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 13ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் அணியின சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த பெங்களூரு அணி 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி பிடித்தது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் அரைசதம் பெரிதும் உதவியது.
பெங்களூரு அணி எளிதான வெற்றி:
Comfortable win and that makes it 4️⃣ in 4️⃣ away games! 🙌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #RRvRCB pic.twitter.com/yKSjpNRShP
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 13, 2025
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்து, 92 ரன்கள் என்ற அற்புதமான தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பில் சால்ட் வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 65 ரன்கள் எடுத்து புயல் வேக இன்னிங்ஸை ஆடினார் மறுபுறம், விராட் கோலி 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 62 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பில் சால்ட் ஆட்டமிழந்த பிறகு, விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து 83 ரன்கள் கூட்டணி அமைத்து பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஒருபுறம், விராட் 62 ரன்கள் எடுக்க, மறுபுறம் படிக்கல் அதிவேகமாக 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதனால், பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இவர்களின் விக்கெட்டை வீழ்ந்த ராஜஸ்தான் அணி 7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது. இதில் குமார் கார்த்திகேயா மட்டுமே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் நடந்தது என்ன..?
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து, துருவ் ஜூரெல் 35 ரன்களும், ரியான் பராக் 30 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஸ்கோரை பெங்களூரு வீரர்களான விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் எளிதாக விரட்டினர். ஐபிஎல் 2025ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ரஜத் படிதரின் படை தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.