PBKS vs KKR: சக்கரவியூகம் அமைத்த சாஹல்.. சிக்கி சிதைத்த கொல்கத்தா அணி.. 95 ரன்களுக்குள் சுருண்ட சோகம்!
Punjab Kings Shock KKR: ஐபிஎல் 2025ன் 31வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பஞ்சாப், 112 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தாவை 95 ரன்களில் சுருட்டியது. யுஸ்வேந்திர சஹாலின் அபார பந்துவீச்சு கொல்கத்தா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

யுஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 31வது போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகள் முல்லன்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15. 3 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பதிலுக்கு 112 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியால் 95 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
112 ரன்கள் மட்டுமே இலக்கு:
112 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்துவதற்காக கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் 7 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குயின்டன் டி காக் 2 ரன்கள் எடுத்தும், சுனில் நரைன் 5 ரன்கள் மட்டும் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்த குறைந்த ஸ்கோர் போட்டியில், அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போதுதான் வில்லனாக யுஸ்வேந்திர சஹால் உள்ளே வந்தார். வந்த வேகத்தில் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை எல்பிடபிள்யூ முறையில் 17 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.
7 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் சரிவு:
112 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்டத்தில் வலுவாக 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு, அங்கிரிஷ் ரகுவன்ஷியின் ஆட்டமிழக்குடன் தொடங்கிய விக்கெட் வேட்டை அதன்பின் நிற்கவில்லை. கொல்கத்தா அணி வெறும் அடுத்த 7 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோரின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தன.
யுஸ்வேந்திர சாஹல் வீசிய 14வது ஓவரில் ரஸல் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை கொடுக்க, அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில் 30 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. 15வது ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் மெய்டனுடன் வைபவ் அரோரா விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு 16வது ஓவர் வீசிய யான்சென் முதல் பந்திலேயே ரஸலை ஆட்டமிழக்க செய்ய, பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
கொல்கத்தா அணியின் நிலையை சீர்குலைத்ததில் யுஸ்வேந்திர சாஹல் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார். 4 ஓவர்கள் வீசிய சாஹல் 28 ரன்களை விட்டுகொடுத்து அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் மற்றும் ரமண்தீப் சிங் ஆகியோரின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.