SRH vs MI: ஹிட் மேன் ரோஹித் அதிரடி 70.. ஹைதராபாத் அணி தோல்வியில் மூழ்கிய சோகம்!
MI vs SRH IPL 2025 Match 41: ஐபிஎல் 2025 இன் 41வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் 143 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் 2025 (IPL 2025) 41வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 23ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் (Mumbai Indians) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் 4வது தொடர்ச்சியான வெற்றியாகும். முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. மும்பை அணி தற்போது 9 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது.
144 ரன்கள் இலக்கு
144 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ரியான் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். பவர்பிளேயில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 56 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். முன்னதாக, ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தார். வில் ஜாக்ஸ் 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 70 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி 15.4 ஓவர்களில் 144 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
ஹைதராபாத் சொதப்பல்:
முன்னதாக, டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து உள்ளே வந்த இஷான் கிஷன் 01, நிதிஷ் குமார் ரெட்டி 02, அனிகேத் வர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் பிறகு, ஹென்ரிச் கிளாசென் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் ரன்களை குவித்து ஹைதராபாத் அணி கௌரவ இலக்கை தொட உதவினர்.
கிளாசென் 44 பந்துகளில் 71 ரன்கள் எடுக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய மனோகர், 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்த இருவரின் உதவியால், ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 140 ரன்களைத் தாண்டியது. இருப்பினும், இந்த ரன்கள் போதுமானதாக இல்லை.