IPL 2025: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை வெற்றி
MI vs SRH: ஐபிஎல் போட்டியின் 33 வது லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்ததால் ஹைதராபாத் அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் (IPL) 2025ன் ஏப்ரல் 17, 2025 அன்று நடைபெற்ற 33வது லீக் போட்டியில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் 9வது இடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணியும் மோதின. இந்தப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வென்ற முனைப்பில் மும்பை அணி களமிறங்கியது. அதே போல பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அபிஷேக் சர்மாவின் அதிரடியால் அபார வெற்றி பெற்ற வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த போட்டியில் களமிறங்கியது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் நிதானமான துவக்கம் தந்தனர்.
படு நிதானமாக ஆடிய ஹெட் 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து வில் ஜேக்ஸ் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷான் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக சிக்ஸ்களாக பறக்க விட்ட இவரால் ஏப்ரல் 17, 2025 அன்று நடந்த போட்டியில் ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கிளாசன்
கடைசி கட்டத்தில் கிளாசன் மற்றும் அங்கித் வர்மா அதிரடி காட்டினர். குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் அங்கிந்த வர்மா அதிரடியா எதிர்கொண்டார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் சார்பாக வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் போல்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டுகளையும் விழ்த்தினர்.
மும்பை அபார வெற்றி
இந்த நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோஹித் சர்மா தன் பங்குக்கு 3 சிக்சர்கள் அடித்து 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரிக்கெல்டன் 31 ரன்களும் வில் ஜாக்ஸ் 36 ரன்களும் எடுத்து வெளியேறினர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் போனாலும் அணியின் ஸ்கோர் மள மளவென உயர்ந்தது. இறுதி கட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களும் திலக் வர்மா 21 ரன்களும் அடிக்க அந்த அணி 18.1 ஓவரிலேயே இலக்கை அடைந்தது. இதனையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 4 தோல்வி என 7 வது இடத்திலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகள் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி என 9 இடத்திலும் உள்ளது. வருகிற ஏப்ரல் 20 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.