Virat Kohli’s 100th T20 Fifty: டி20யில் 100 அரைசதம்! உலகத்தை மிரள வைத்த விராட் கோலி.. முதல் இந்தியர் என்ற சாதனை!

Virat Kohli Achieves 100 T20 Half-Centuries: விராட் கோலி ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது டி20 அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இது டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. மேலும், ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் (66) அடித்த வீரர்களில் முதலிடத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

Virat Kohlis 100th T20 Fifty: டி20யில் 100 அரைசதம்! உலகத்தை மிரள வைத்த விராட் கோலி.. முதல் இந்தியர் என்ற சாதனை!

விராட் கோலி

Published: 

13 Apr 2025 21:03 PM

கிரிக்கெட்டின் கிங், ரன் மெஷின் மற்றும் சேஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விராட் கோலி (Virat Kohli), ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் என சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு, ஐபிஎல் 2025லிலும் ரன் மழை பொழிந்து வருகிறது. 2025  ஏப்ரல் 13ம் தேதியான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தனது பெயரில் மற்றொரு சிறப்பு சாதனையையும் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் 2025ல் (IPL 2025) சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம், இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இப்போது மீண்டும் அரை சதங்கள் மூலம் இதேபோன்ற சாதனை ஒன்றைச் செய்துள்ளார்.

முதல் இந்தியர் என்ற சாதனை:


ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு, விராட் கோலி தனது 100வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதங்களை அடித்த இந்திய அளவில் முதல் வீரர் என்ற பெருமையையும், உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் விராட் கோலி படைத்தார். கோலிக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல்லில் 66வது அரைசதம்:

மேலும், ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலியின் 66வது அரைசதம் இதுவாகும். இதன்மூலம், 66 அரைசதங்கள் அடித்திருந்த டேவிட் வார்னருடன் இணைந்து விராட் கோலியும் முதலிடத்தில் உள்ளார். இதற்குப் பிறகு ஷிகர் தவான் 53 அரை சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக விராட் கோலி தனது 405 போட்டிகளில் 387 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் மற்றும் 100 அரைசதங்கள் உட்பட 13134 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஐபிஎல் 2025 சீசனில் விராட் கோலி இதுவரை 6 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்களுடன் 248 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல்லில் அதிக சதங்கள்:

ஐபிஎல்லில் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி தன் பெயரில் பதிவு செய்துள்ளார். ஐபிஎல்லில் விராட் கோலி இதுவரை 256 போட்டிகளில் 8 சதங்களுடன் 8168 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், சர்வதேச  டி20 சர்வதேச கிரிக்கெட்டில், விராட் கோலி 125 போட்டிகளில் 137.04 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 48.69 சராசரியிலும்,  1 சதம் மற்றும் 38 அரை சதங்களுடன் 4188 ரன்கள் எடுத்துள்ளார்.