LSG vs DC: கலக்கிய கே.எல்.ராகுல்.. அக்ஸர் சிக்ஸர் மழை.. லக்னோவை வீழ்த்தி டெல்லி அசத்தல்!
Delhi Capitals Beat Lucknow Super Giants: ஐபிஎல் 2025ன் 40வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லக்னோ அணி 159 ரன்கள் எடுத்தது; கே.எல். ராகுல் 57 ரன்களுடன் 5000 ஐபிஎல் ரன்களை கடந்தார். டெல்லி அணியின் வெற்றியில் அபிஷேக் போரெல் (51 ரன்கள்) மற்றும் அக்சர் படேல் (34 ரன்கள்) முக்கிய பங்காற்றினர்.

கே.எல்.ராகுல் - டெல்லி அணி வீரர்கள்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 40வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிகள் லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 52 ரன்களும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களும் எடுத்தனர். இதன் பிறகு, நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2, டேவிட் மில்லர் 14 நாட் அவுட், ரிஷப் பந்த் டக் அவுட் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, எதிர்பார்த்த ஸ்கோரை லக்னோ அணி எட்டவில்லை. டெல்லி அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை அள்ளி இருந்தார்.
160 ரன்கள் இலக்கு:
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர் மற்றும் அபிஷேக் போரல் களமிறங்கினர். அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் மற்றும் அபிஷேக் போரெல் இணைந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச்சாளர்களை சோதிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து 69 ரன்கள் சேர்த்தனர்.
5000 ரன்களை கடந்த கே.எல்.ராகுல்:
Another match, another record broken. This is the KLR era 😌💙 pic.twitter.com/xIX0WWlMXX
— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2025
டெல்லி கேபிடல்ஸ் அணி 12வது ஓவரில் 105 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் அபிஷேக் போரெல் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 14 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. ரவி பிஷ்னோய் வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஒரு முனையில் கேப்டன் அக்ஸர் படேல் சிக்ஸர்களாக அடிக்க, மறுமுனையில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதத்துடன் ஐபிஎல்லில் தனது 5000 ரன்களை கடந்தார்.
இதன் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 160 ரன்களை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 57 ரன்களுடனும், கேப்டன் அக்சர் படேல் 34 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த சீசனில் டெல்லி அணி இரண்டாவது முறையாக லக்னோ அணியை வீழ்த்தியுள்ளது. மேலும், ஐபிஎல் 2026ல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆறாவது வெற்றி இதுவாகும்.