KKR vs GT: சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்..!
Gujarat Titans Triumphs: ஐபிஎல் 2025ன் 39வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த குஜராத் 198 ரன்கள் குவித்தது. கில் (90) மற்றும் சுதர்சன் (52) அபாரமாக விளையாடினர். கொல்கத்தா அணி 159 ரன்களில் சுருண்டது. ரஹானே (50) மட்டும் சிறப்பாக ஆடினார். குஜராத் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

ஐபிஎல் 2025ன் 39வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 21ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 55 பந்துகளில் 90 ரன்களும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
199 ரன்கள் இலக்கு:
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இருப்பினும், குஜராத் அணி சார்பில் முதல் ஓவர் வீசிய முகமது சிராஜ் கொல்கத்தா அணிக்கு முதல் அடியை கொடுத்தார். சிராஜ் ரஹ்மானுல்லா குர்பாஸை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சுனில் நரைனுடன் அஜிங்க்யா ரஹானே களம் கண்டார். இந்த ஜோடில் 5.3 ஓவர்களில் 43 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்த சுனில் நரைன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒருமுனையில் சிறப்பாக ஆடி பவுண்டரிகளை விரட்ட தொடங்கினார். அதேநேரத்தில், வெங்கடேஷ் ஐயர் பாலுக்கு பால் தட்டி ஆடினார். இதன் காரணமாக, கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 12வது ஓவரில் கொல்கத்தா அணி 84 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டை இழந்தது. வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.
13வது ஓவரில் ரஹானே 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, உள்ளே வந்த ரஸல் 21 ரன்கள் ஆட்டமிழந்தார். தொடர்ந்த், ரமன்தீப் சிங் 1 ரன்னிலும், மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இம்பேக்ட் பிளேயராக வந்த ரகுவன்ஷி அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்களை விரட்டினாலும், கட்டையை போட்ட ரிங்கு சிங் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.