DC vs MI: 3 ரன் அவுட்டில் முடிந்த டெல்லி கதை.. கடைசி நேரத்தில் கலக்கி மும்பை வெற்றி..!
IPL 2025 Match 29: மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. திலக் வர்மா 59 ரன்களுடன் மும்பை அணியின் சிறந்த ஆட்டக்காரராகத் திகழ்ந்தார். டெல்லி அணி சார்பில் கருண் நாயர் 89 ரன்கள் எடுத்தார் என்றாலும், அவரது அரைசதம் போதவில்லை. இறுதி ஓவர்களில் மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற்றனர்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) இன்றைய (13.04.2025) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 59 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து, ரிக்கல்டன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மேலும், நமன் தீர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
2026 ரன்கள் இலக்கு:
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரல் களமிறங்கினர். மும்பை அணிக்காக முதல் ஓவரை வீசிய தீபக் சாஹர் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க்கை ஆட்டமிழக்க செய்தார். இதையடுத்து, இம்பேக்ட் பிளேயராக கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லில் கருண் நாயர் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய கருண் நாயர் பும்ரா பந்திலேயே சிக்ஸரும், பண்டரியாகவும் அடிக்க தொடங்கினார். மறுமுனையில் அபிஷேக் போரெல் தட்டி தட்டி ஆட, மும்பை பந்துவீச்சாளர்களுக்கு கருணையே காட்டாத கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 134 ரனக்ள் தேவையாக இருந்தது. தொடர்ந்து, இருவரும் சிறப்பாக விளையாட டெல்லி கேபிடல்ஸ் அணி 9 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. டெல்லி அணி வெற்றி பெற 66 பந்துகளில் 106 ரன்கள் தேவையாக இருந்தது. கருண் நாயர் 66 ரன்களும், அபிஷேக் போரெல் 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கருணை காட்டாத கருண் நாயர்:
கரண் சர்மா வீசிய 11 ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய அபிஷேக் போரெல் 2வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் போரெல் அவுட்டாகி வெளியேறினார். அப்போது, டெல்லி அணி 10.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒரு பெரிய விக்கெட் விழுந்தது. 40 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்த கருண் நாயர் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக உள்ளே வந்த கேப்டன் அக்ஸர் படேல் 9 ரன்களும், ஸ்டப்ஸ் 1 ரன்னும், கே.எல்.ராகுல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சாண்ட்னர் வீசிய 18வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் வீசிய விப்ராஜ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் டெல்லி இருந்தது. பும்ரா வீசிய முதல் பந்து டாட் ஆனாலும், அடுத்த 2 பந்துகளை அஷூதோஷ் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த அஷூதோஷ் சர்மா ரன் அவுட்டாக, அதே மாதிரி உள்ளே வந்த குல்தீப் யாதவும் 2 ரன்களுக்கு ஆசைபட்டு விக்கெட்டை விட்டார். 18.6 பந்திலும் மோஹித் சர்மா ரன் அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.