RR vs LSG: திக்! திக்! கடைசி நேரத்தில் ராஜஸ்தானை லாக் செய்த லக்னோ.. பண்ட் படை த்ரில் வெற்றி!
Rajasthan Royals vs Lucknow Super Giants: ஐபிஎல் 2025ன் 36வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லக்னோ அணி முதலில் 180 ரன்கள் குவித்தது. மார்க்ராம் (66) மற்றும் படோனி (50) சிறப்பாக விளையாடினர். ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 74 ரன்கள் எடுத்தார். ஆனால், கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வீரராக அறிமுகமானார்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 36வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 19ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் (Lucknow Super Giants) மோதியது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்க்ராம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, படோனி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 50 ரன்கள் எடுத்தார். கடைசியாக களமிறங்கிய அப்துல் சமத் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து லக்னோ அணி 180 ரன்களை கடக்க உதவினார்.
ராஜஸ்தான் தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
181 ரன்கள் இலக்கு:
181 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது 23 நாட்களே ஆன நிலை ஐபிஎல்லில் மிக குறைந்த வயதில் அறிமுகமான இளைய வீரர் என்ற சாதனையை படைத்தார். இளங்கன்று பயம் அறியாது என்பதுபோல் ஐபிஎல்லில் தான் சந்தித்த முதல் பந்தே வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிக்ஸர் அடித்தார். ஒரு முனையில் ஜெய்ஸ்வால் அதிரடிகாட்ட, மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 85 ரன்கள் குவித்தது.
முதல் போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உதவியுடன் 34 ரன்கள் குவித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, மற்றொரு ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனது அரைசதம் கடந்து அசத்த, உள்ளே அந்த ராணாவும் ஒரு சிக்ஸர் மட்டுமே எடுத்து 8 ரன்கள் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 94 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் கூட்டணி சூப்பரான பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 156 ரன்களாக இருந்தபோது 3 விக்கெட்டை இழந்தது.
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் க்ளீன் போல்டானார். அதே ஓவரில் கேப்டன் ரியான் பராக் 38 ரன்களில் எல்பிடயிள்யூ முறையில் அவுட்டானார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 20 ரன்கள் தேவையாக இருந்தது. ஹெட் மியர் 19வது ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டி, கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலைமையை கொண்டு வந்தார். முதல் 2 பந்துகளில் ஹெட்மியர் மற்றும் துருவ் இணைந்து 3 ரன்களை சேர்த்த நிலையில் 3வது ஹெட்மியர் ஆவேஷ் கான் பந்தில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராஜஸ்தான் அணிக்கு 3 பந்தில் 6 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், 4வது பந்தை டாட்டாக வீசினார் ஆவேஷ் கான். 5வது பந்தில் ஷூபம் துபே 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.