Rishabh Pant: கேப்டனாக சொதப்பல்! பேட்டிங்கில் சொதப்பல்! ரூ. 27 கோடி எதற்கு..? ரசிகர்கள் ரிஷப் பண்ட் மீது விமர்சனம்!

Rishabh Pant's Poor Performance: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மோசமான பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் திறன்கள் கேள்விக்குறியாகியுள்ளன. 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட பண்ட், இந்த சீசனில் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்த கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Rishabh Pant: கேப்டனாக சொதப்பல்! பேட்டிங்கில் சொதப்பல்! ரூ. 27 கோடி எதற்கு..? ரசிகர்கள் ரிஷப் பண்ட் மீது விமர்சனம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்

Published: 

23 Apr 2025 11:27 AM

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். ஆனால் நேற்று அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியின் கேப்ரன் ரிஷப் பண்ட்-க்கு (Rishabh Pant) அனைத்துமே கோணலாக அமைந்தது. ஒருவர் தனது இயல்புக்கு மாறாக நடந்து கொள்ள திடங்கும்போது, ஏதோ தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த அணியின் கேப்டனாக இருந்தாலும் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதிகமாக கோபப்பட்டால், அணியில் சமநிலை பாதிக்கப்படும். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட், போட்டி முழுவதும் கோபப்படுவதை காண முடிந்தது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரிய விவாதங்களை கிளப்பி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 2025 ஏப்ரல் 22ம் தேதியான நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே ஒரு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்தான் மிகப்பெரிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி என இரண்டுமே கேள்விக்குறியாக எழுப்பப்பட்டுள்ளது.

20 ஓவரில் பேட்டிங்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இணைந்து 10 ஓவர்களில் சுமார் 90 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு, 10வது ஓவரிலேயே ஐடன் மார்க்ராமின் விக்கெட் வீழ்ந்தது. அடுத்து உள்ளே வந்த பூரனும் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதற்குபிறகு, கேப்டன் பண்ட் வராமல் சமத் பேட்டிங் செய்ய வந்தார். லக்னோ நல்ல நிலையில் இருந்ததால், விரைவாக ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், 14வது ஓவரில் சமத்தும் அவுட்டானார். தொடர்ந்து பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது வரவில்லை. அதே ஓவரில் மிட்செல் மார்ஷின் விக்கெட்டும் விழுந்தது. அந்தநேரத்தில், பண்ட் வராமல் படோனியை அனுப்பி வைத்தார். 19.5 பந்தில் களமிறங்கிய பண்ட், ரன் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

27 கோடிக்கு ஏலம்:

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்ட்-ஐ வாங்கியது. இருப்பினும், இந்த சீசனில் ரிஷப் பண்ட் கேப்டனாகவும் சரி, பேட்ஸ்மேனாகவும் சரி சொதப்பி வருகிறார். ஐபிஎல் 2025 சீசனில் ரிஷப் பண்ட் இதுவரை 9 போட்டிகளில் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட், 63 ரன்கள் எடுத்தார். அதுவும் அதிக பந்துகளில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது மோசமான பேட்டிங்கிற்காக ரிஷப் பண்ட் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.