KKR vs DC: சுழலில் சிக்கிய டெல்லி கேபிடல்ஸ்.. ஈடன் கார்டனில் கொல்கத்தா அசத்தல் வெற்றி..!
Kolkata Knight Riders Victory: ஐபிஎல் 2025 இன் 48வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா 204 ரன்கள் குவித்தது. டெல்லி சார்பில் டு பிளெசிஸ் அரைசதம் அடித்தார். ஆனால், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் அற்புத பந்துவீச்சால் டெல்லி தோல்வியடைந்தது. விப்ராஜ் நாயகனாக விளங்கினாலும், இறுதியில் கொல்கத்தாவிற்கு வெற்றி கிடைத்தது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 48வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 பந்துகளில் 44 ரன்களும், ரிங்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், விபராஜ் நிகாம் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
205 ரன்கள் இலக்கு:
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரெல் மற்றும் பாஃப் டு பிளேசிஸ் களமிறங்கினர். அங்குல் ராய் வீசிய முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் போரெல், அடுத்த பந்தே ஆட்டமிழந்தார். டு பிளேசிஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வைபவ் அரோரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி ஏழாவது ஓவரில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. கே.எல். ராகுல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் அவுட்டானார். உள்ளே வந்த அக்ஸர் படேல் தன் பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்ஸர்களாக வெளுத்தார். மறுமுனையில், தொடக்கம் முதலே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டு பிளெசிஸ் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணி விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, அதே ஓவரில் டிரெஸ்டன் ஸ்டப்ஸ் மூன்று பந்துகளில் ஒரு ரன் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். இதன்மூலம், சுனில் நரைன் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் போக்கையே மாற்றினார்.
பயம் காட்டிய விப்ராஜ்:
மீண்டும் 16வது ஓவர் வீசிய சுனில் நரைன் 62 ரன்கள் எடுத்திருந்த பாப் டு பிளேசிஸை ஆட்டமிழக்க செய்ய, அடுத்த ஓவர் வீசிய வருண் சக்கரவர்த்தி அஷ்தோஷ் சர்மா மற்றும் மிட்செல் ஸ்டார்கை ஆட்டமிழக்க செய்தார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவர் வீசிய ஹர்சித் ராணா பந்தில் விப்ராஜ் 13 ரன்கள் எடுத்து இலக்கை 6 பந்துகளில் 25 ரன்களாக கொண்டு வந்தார்.
ரஸல் வீசிய கடைசி ஓவரில் விப்ராஜ் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து க்ளீன் போல்டானார். இதன்மூலம், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.