MS Dhoni Injury: காயத்தால் அவதிப்படும் தோனி.. மும்பை அணிக்கு எதிராக களமிறங்கமாட்டாரா..?
Injury scare for MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகியுள்ளார். இந்தநிலையில், தற்போதைய சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனியும் காயத்தால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நீண்ட நாட்களுக்கு பிறகு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும், ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது என்ற மகேந்திர சிங் தோனி (MS Dhoni) காயமடைந்துள்ளார். இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று தெரியவில்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக தோனி, அற்புதமான இன்னிங்ஸை விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியின் போது ரன் எடுக்க முயன்றபோது தோனி காலில் பிரச்சனையை எதிர்கொண்டார். போட்டிக்குப் பிறகும் அவருக்கு வலி இருப்பதாக கூறப்படுகிறது இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எம்.எஸ். தோனி இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.
கலக்கிய எம்.எஸ்.தோனி:
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக தோனி 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது, சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து தவித்தது. உள்ளே வந்த எம்.எஸ்.தோனி வெறும் 11 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உதவியுடன் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலக்கை துரத்தும்போது சென்னை அணியின் இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் தோனியின் காலில் லேசான பிரச்சனை ஏற்பட்டு அவதிப்பட்டார். போட்டிக்குப் பிறகும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. கடந்த சீசனின்போதும் எம்.எஸ்.தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் பிறகு அவரால் நீண்ட நேரம் விளையாட முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனி விளையாட மாட்டாரா?
Thala Dhoni limping , Hopefully not a serious one pic.twitter.com/cYfPOpWARG
— Chakri Dhoni (@ChakriDhonii) April 15, 2025
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியானது வருகின்ற 2025 ஏப்ரல் 20ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக எம்.எஸ்.தோனி விளையாடுவாரா இல்லையா என்பது அவரது உடற்தகுதியைப் பொறுத்தது. ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எம்.எஸ். தோனியின் காயம் குறித்து எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. தோனி முழுமையாக உடற்தகுதி பெறவில்லை என்றால், மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டுமல்ல, வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலக நேரிடலாம்.
ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, எம்.எஸ்.தோனி தலைமை தாங்க, சென்னை அணியில் தொடக்க வீரராக ஆயுஷ் மத்ரே களமிறங்கினார். நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் சென்னை அணி நேற்றைய போட்டியில் லக்னோவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது.