India’s England Tour 2025: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு 35 வீரர்கள் தேர்வு.. கேப்டனாக ரோஹித்..? கருண் நாயருக்கு வாய்ப்பு!
Rohit Sharma's Captaincy Future: ஐபிஎல் 2025க்குப் பின், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் தொடர்ந்து இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அல்லது வேறு யாராவது கேப்டனாக நியமிக்கப்படலாம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேர்வு முக்கியமானதாக உள்ளது. கருண் நாயர் மற்றும் ரஜத் படிதார் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியா ஏ தொடரில் இவர்கள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team), இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ (BCCI) இப்போதே திட்டமிட்டு வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தில் த்ரீ லயன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இது 2025 மே மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியா மற்றும் இந்திய ஏ அணிக்கு யார் தலைமை தாங்க வாய்ப்புள்ளது உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
யார் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு..?
இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள இந்தியா ‘ஏ’ சுற்றுப்பயணத்திற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தயாரித்து வருகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, இந்தியா ‘ஏ’ மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 35 வீரர்களில் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறது. இதன் காரணமாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க அணி தயாராக இருக்கிறதா என்பது குறித்து தேர்வாளர்களும், கிரிக்கெட் வாரியமும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அப்படி ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஒரு வீரராக களமிறங்கலாம். அதேநேரத்தில், ஜஸ்பிரித் பும்ராவிற்கு கேப்டன் பதவியை வழங்கலாம்.
கருண் நாயருக்கு வாய்ப்பா..?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் மே இரண்டாவது வாரத்திற்குள் அணிகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், 5 அல்லது 6வது இடத்தில் நிலையான மிடில் ஆர்டர் டெஸ்ட் பேட்ஸ்மேனைக் கண்டுபிடிப்பதுதான். வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சர்பராஸ் கான் உள்ளிட்ட வீரர்களை முயற்சித்தும் அது பலன் அளிக்கவில்லை. எனவே, இந்த இடத்திற்கு ரஜத் படிதார் மற்றும் கருண் நாயர் ஆகியோரை தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. மே 25 ஆம் தேதி ஐபிஎல் முடிவடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு தொடங்கும் இந்தியா ‘ஏ’ தொடரில் இவர்கள் இருவரும் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்து தொடருக்கு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் இடம் பிடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2025 ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி 2025 ஜூலை 31 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும்.