IPL 2025: சேப்பாக்கத்தில் மீண்டும் கேப்டனாக தோனி.. கொல்கத்தாவை வீழ்த்துமா சென்னை..? இன்றைய போட்டி யாருக்கு சாதகம்?
Chepauk Pitch Report: சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் என்ற சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் முகமது களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 25வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டிகளில் அடைந்த தோல்விகளை சரிசெய்ய, இந்த போட்டியில் முயற்சிக்கும். முழங்கை காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகினார். இதன் காரணமாக, எம்.எஸ்.தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தலைமை ஏற்கிறார். இந்தநிலையில், இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
பிட்ச் ரிப்போர்ட்:
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் என்ற சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் முகமது களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கொல்கத்தா அணியும் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கலாம்.
அதன்படி, மொயீன் அலி, வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக இடம் பெறலாம். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதலில் பேட்டிங் செய்யும்போது சராசரி ஸ்கோராக 164 ரன்கள் ஆக கண்டறியப்படுகிறது. நடப்பு சீசனில், இங்கு இலக்கை துரத்துவது அணிகளுக்கு கடினமாக உள்ளது. இந்த மைதானத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் 180 ரன்கள் என்ற ஸ்கோரை பதிவு செய்தன. ஆனால், இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் துரத்த முடியாமல் தோல்வி அடைந்தது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 30 போட்டிகள் நடந்துள்ளன. இதில், சென்னை சூப்பர் சிங்ஸ் அணி அதிகபட்சமாக 19 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான கடைசி 10 போட்டிகளில், சென்னை அணி 7 முறை கொல்கத்தா அணியை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடந்த 10 போட்டிகளில், கொல்கத்தா அணி சென்னை அணியை 3 முறை மட்டுமே வீழ்த்தியுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதிஷா பதிரனா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன்/ மொயீன் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி