சிஎஸ்கேவின் மோசமான ஃபீல்டிங்: பஞ்சாப் 219 ரன்கள் குவிப்பு !
CSK Misfields, Punjab Kings Scores 219: இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 கேட்ச்களை தவற விட்டிருக்கின்றனர். இந்த தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக தவறாக விட்ட கேட்ச்களின் எண்ணிக்கையும் இது தான் என கூறப்படுகிறது. சென்னையின் மோசமான பீல்டிங் அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமாக காரணமாக அமைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2025-ல் (IPL) 22வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings) ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதின. இந்தப் போட்டியானது ஏப்ரல் 8, 2025 அன்று சண்டிகரில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களமிறங்கினர். பிரப்சிம்ரன் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டாக அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடனும், ஸ்டோனிஸ் 4 , மேக்ஸ்வெல் 1 ரன்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதைப் பற்றி துளியும் கவலைப்படாத பிரியான்ஷ் ஆர்யா அடித்து ஆடினார். சென்னை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர், 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர் என 42 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய ஷஷான்க் சிங் 52 ரன்களிலும், மார்கோ ஜான்சன் 34 ரன்களும் எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் நூர் அகமது, முகேஷ் சௌத்ரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியிருக்கிறது.
சென்னை அணியின் மோசமான பீல்டிங்
இந்த போட்டியில் முதல் பந்திலேயே பிரியானன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடித்தார். பின்னர் அடுத்த பந்தில் அவர் அடித்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டு அவரது விக்கெட் வாய்ப்பை கலீல் அகமது இழந்தார். அந்த பந்தை அவர் பிடித்திருந்தால் பஞ்சாப் அணியின் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இந்தப் போட்டியில் சென்னை அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டனர்.
அஸ்வின் பந்து வீசிய 12வது ஓவரில் அஸ்வீன் வீசிய பந்தை பிரியான்ஷ் ஆர்யா தூக்கி அடிக்க அந்த பந்து லாங்-ஆஃப் பகுதியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த முகேஷ் சௌத்ரியிடம் நேராக சென்றது. அவர் அந்த கேட்சை பிடிக்க முயலும்போது பின்னால் இருந்த ரோப்பை மிதித்து விட அது சிக்ஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த கேட்ச் பிடிக்கப்ப்டடிருந்தால் ஆர்யா சதமடிப்பது தடுக்கப்பட்டிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான பீல்டிங்கால் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்து விட்டது.
இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 கேட்ச்களை தவற விட்டிருக்கின்றனர். இந்த தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக தவறாக விட்ட கேட்ச்களின் எண்ணிக்கையும் இதுதான் என கூறப்படுகிறது. சென்னையின் மோசமான பீல்டிங் அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமாக காரணமாக அமைந்துள்ளது. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணியில் இவ்வளவு மோசமான பீல்டிங் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை சரி செய்தால் மட்டுமே அந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிபெற முடியும்.