Akshaya Tritiya: அட்சய திரிதியை அன்று இதெல்லாம் கூட வாங்கலாம் தெரியுமா?
அக்ஷய திருதியை என்பது சித்திரை மாத அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாள் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் எந்த நல்ல செயலும் நீடித்த பலனைத் தரும் என நம்பப்படுகிறது. அதேபோல் இந்நாளில் தங்கம், வெள்ளி போன்றவை தான் வாங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என சொல்லப்படுகிறது,

அட்சய திரிதியை
இந்து மதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் வரும் ஒவ்வொரு திதிகளை கணக்கிட்டு விசேஷ நாட்களானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாள் ஒரு முக்கிய பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுதான் சித்திரை மாத அமாவாசை முடிந்த 3ஆம் நாள் வருவது அட்சய திருதியை (Akshaya Tritiya) என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல செயலும் நீடித்த பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் இது அட்சய திரிதியை நாள் மிகவும் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 12 மாதங்களில் ஒவ்வொரு அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாவது நாள் மங்களகரமானது என்றும் நம்பப்படுகிறது. ஆனாலும், சித்திரை மாதத்தில் வரும் அட்சய திரிதியை மிகவும் மங்களகரமான நேரமாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில் நாம் எந்த பஞ்சாங்கமும் பார்க்காமல் எந்த வேலையையும் தொடங்கலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் நடத்தப்படும் திருமணம், இல்லறம், பெயர் சூட்டும் விழா, நிலம் பத்திரப்பதிவு போன்ற எந்த ஒரு சுப நிகழ்வும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் துணிகள், நகைகள், வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்குவதும் மிகவும் மங்களகரமானதாகக் பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பொருளாதார நிலையை கணக்கிட்டால் சிலரால் மிகப்பெரிய அளவிலான பொருட்களை வாங்க முடியாது. அப்படியானவர்கள் எக்காரணம் கொண்டும் விரக்தியடையக்கூடாது. இந்த 5 பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் மிகவும் நல்லது என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதனைப் பற்றி நாம் காணலாம்.
அட்சய திரிதியை நாளில் நீங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டிய முதல் விஷயம் பருத்தி ஆடையாகும். எப்படிப்பட்ட நிலையாக இருந்தாலும் சரி ஒரு பருத்தியிலான துணியை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இது உங்கள் தொழிலை பெரிதும் பலப்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் நீங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டிய இரண்டாவது பொருள் கல் உப்பாகும்.
இந்த நாளில் வீட்டிற்குள் கல் உப்பைக் கொண்டு வருவது செழிப்பைத் தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் அன்றைய நாளில் வாங்கிய கல் உப்பை உடனே சமையலறையில் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மூன்றாவதாக மண் பானைகளை இந்த நாளில் வாங்குங்கள். அதன்படி நீங்கள் பானை, கிண்ணம் அல்லது ஜாடி போன்ற எந்த களிமண் பாத்திரத்தையும் வாங்கலாம். தங்கம் வாங்க முடியாதவர்கள் மண் பானைகளை வாங்குவது கூட தங்கம் வாங்குவதற்கு சமமாகக் கருதப்படுகிறது.
அட்சய திருதியை அன்று பார்லி அல்லது மஞ்சள், கடுகு வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதற்கு சமம் என நம்பப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் கடலில் கிடைக்கும் சங்கு உள்ளிட்ட கடல் ஓடுகளை வாங்குவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. லட்சுமி தேவியும் கடல் ஓடுகளுடன் உங்கள் வீட்டிற்கு வருவதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் லட்சுமி தேவிக்கு கடல் ஓடுகள் மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. இந்த நாளில், ஒருவர் 11 சங்குகளை வாங்கி, அவற்றை ஒரு சிவப்பு துணியில் சுற்றி, லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் செல்வத்திற்கு ஒருபோதும் பற்றாக்குறை ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
(இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஆன்மிக நம்பிக்கையின்படி இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் உண்மையின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)