திருச்சி வெக்காளியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
Trichy Uraiyur Vekkaliamman Temple: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கானோர் பால்காவடி, அக்னிசட்டி ஏந்தி கோவிலில் திரண்டு வழிபாடு செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

திருச்சி ஏப்ரல் 14: திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற சித்திரை திருவிழாவில் (Chithirai Thiruvizha) வெக்காளியம்மன் தேரோட்டத்தில் (Vekkaliyamman Temple) ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி ஸ்தலமான வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் திருவிழா, இந்த ஆண்டும் (2025) வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா 2025 ஏப்ரல் 6-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவுகளிலும் ஒவ்வொரு நாளும் 7 மணிக்கு கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாகிய தேரோட்டம் இன்று 14 ஏப்ரல் 2025 வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு வெக்காளியம்மன் திருத்தேரில் எழுந்தருள, அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரம் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12 மணிக்கு மேல் நிலையை அடைந்தது. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, வெளியூர்களிலும் இருந்து திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பால்காவடி, அக்னிச்சட்டி ஊர்வலம் – காவிரி நதியில் புனித நீராடல்
பக்தர்கள் பால்காவடி, அலகுகாவடி, அக்னிசட்டி ஏந்தியவாறே கோவிலுக்கு வந்து சுற்றி வணங்கி நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். அதற்குமுன், காவிரி ஆற்றில் புனித நீராடி பால் குடங்களுடன் வந்து வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி வையூர் பகுதி முழுவதும் விழாக்கோலத்தில் திகழ்ந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெக்காளியம்மன் கோவிலின் சிறப்புகள்
சோழ நாட்டின் தலைநகராக இருந்த உறையூரில் கோபுரம் இல்லாமல் திறந்த வெளியில் அம்மன் வீற்றிருக்கும் இந்த கோவிலில், “வேண்டும் வரம் வழங்கும் வெக்காளியம்மன்” என்ற நம்பிக்கையால், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை எழுதிப் பேப்பரில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விழாவாக உள்ளது.
விநாயகருக்கு வெள்ளிக் கவசம் – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ் புத்தாண்டு தினமான “விசுவாவசு” வருட பிறப்பை ஒட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இத்துடன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், வயலூர் முருகன் கோவில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.