Vastu Tips: வீட்டில் பூஜையறை.. வாஸ்துப்படி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
ஒரு வீட்டின் நேர்மறை ஆற்றலுக்கான மையமாகப் பூஜை அறை உள்ளது. வாஸ்துப்படி, வடகிழக்கு பகுதி சிறந்த இடமாக கருதப்படுகிறது. அதேபோல் அங்கு வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் சிலைகள் ஒன்றையொன்று நோக்கி அல்லது சுவரை ஒட்டியும் வைக்கக் கூடாது. இதுதொடர்பான விஷயங்களை காணலாம்.

பூஜையறை வாஸ்து டிப்ஸ்
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை (Pooja Room) என்பது வீட்டில் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வுகளின் மையமாக உள்ளது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் உங்கள் வீட்டைக் கட்டும் போது பூஜை அறைக்கான வாஸ்துவை (Vastu Tips) மனதில் கொள்வது மிகவும் முக்கியம் என முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வாஸ்து என்பது ஜோதிட சாஸ்திரத்தில் (Astrology) மிக முக்கியமான ஒன்றாகும். எப்படி கிரகங்கள் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் பங்கெடுக்கிறதோ, அதேபோல் நாம் இருக்கும் இடத்தின் வாஸ்துவும் அத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி அல்லது சிறியதாக இருந்தாலும் சரி பூஜை அறை என்பது ஒரு வீட்டில் மிக முக்கியமான ஒன்றாகும். சரியான வாஸ்துவில் அமைக்கப்பட்ட பூஜையறை அமைதியான, நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதிலும், உங்கள் வீட்டில் எந்த வகையான ஆற்றல் பரவுகிறது என்பதை தீர்மானிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பூஜையறையின் வாஸ்து விஷயங்கள் பற்றிக் காணலாம்.
1. பூஜை அறையின் நிலை
பொதுவாக வீட்டில் வடகிழக்குப் பகுதி பூஜையறைக்கு சிறந்த இடமாக திகழ்கிறது. அது சிவபெருமான் இருப்பிடமாக பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கிழக்கு அல்லது வடக்கு திசையை முயற்சிக்கலாம். ஆனால் தெற்கு நோக்கிய பூஜை அறைக்கான அசுபமாக பார்க்கப்படுகிறது. பூஜை அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். அதேபோல் பூஜை அறை தரைத்தளத்தில் அல்லது முதல் தளத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கு உருவாகும் நேர்மறை அதிர்வுகளுக்கு பிரமிட் வடிவ கூரை பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் கோயில் உட்கோபுரம் கூட பிரமிடு வடிவில் அமைக்கப்படும்.
2. கடவுளின் இடம்
பொதுவாக வாஸ்துப்படி பூஜை அறையில் உள்ள சிலைகள் ஒன்றையொன்று நோக்கி இருக்கக்கூடாது. அதேபோல் சுவரை ஒட்டியும் வைக்க வேண்டாம். சிலைகளை வடகிழக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். சிலைகளாக இருக்கும் பட்சத்தில் தரையில் இருந்து குறைந்தது ஒரு அடி உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.மேலும் பூஜையறையினுள் இறந்தவரின் படங்களையோ அல்லது வன்முறையைச் சித்தரிக்கும் படங்களையோ வைக்க வேண்டாம். விளக்குகளை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். படங்களாக இருந்தாலும் ஒன்று சுவற்றில் அல்லது டேபிளில் இருக்க வேண்டும்.
3. சேமிப்பு நோக்கம்
சிலர் சில நேரங்களில் பூஜையறையை சம்பந்தமே இல்லாத பொருட்களால் நிரப்புவார்கள். ஆனால் அங்கு புனிதப் பொருட்கள் மற்றும் பிற பூஜை அறைப் பொருட்களைச் சேமிப்பதைத் தவிர வேறு எதுவும் சேர்க்கக்கூடாது. எல்லா பொருட்களும் டேபிள் போடப்பட்டிருப்பின் அடியில் தான் இருக்க வேண்டும்.
4. பூஜை அறையில் அலமாரி
சில வீடுகளில் பூஜை அறையில் அலமாரியானது வைக்கப்படும். அப்படி நீங்கள் வைக்க விருப்பப்பட்டால் வாஸ்து சாஸ்திரத்தின்படி சூரிய ஒளியைத் தடுக்காமல் தென்கிழக்கு திசையில் வைப்பது சிறந்தது. இவை பக்கவாட்டில் தான் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விளக்கு, சிலைகள், உருவப்படங்களுக்கு மேல் வைக்கக்கூடாது.
5. பூஜை அறையின் நிறம்
அமைதி மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களின் வெளிப்பாடு என்பதால் பூஜையறைக்கு வெளிர் நிறங்கள் சிறந்தவை.வெளிர் நீலம், வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் போன்ற நிறங்களை அடிக்கலாம். வடகிழக்கு திசையில் இருந்தால் வெள்ளை நிறம் சிறந்ததாகும்.
6. விளக்கு ஏற்றுதல்
நன்கு வெளிச்சமாக வைத்திருக்க, பூஜை அறையில் குறைந்தது ஒரு ஜன்னலாவது இருப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அல்லது போதுமான வெளிச்சத்தை உறுதி செய்ய ஒரு லைட் வைக்கலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. இந்த தகவல்களின் துல்லியத்திற்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இல்லை)