Vastu Tips: ஆபீஸ் ஆரம்பிக்க போறீங்களா?.. வாஸ்துப்படி என்ன செய்யலாம் பாருங்க!
வாஸ்து சாஸ்திர குறிப்புககளில் அலுவலகத்தை அமைப்பது, கணக்காளர்களின் இருக்கை அமைப்பு, நிதி உள்ளிட்ட ஆவணங்களை வைக்கும் இடம், மேசை அமைப்பு மற்றும் அலுவலக சுற்றுச்சூழல் ஆகியவற்றை சரியான முறையில் அமைப்பதன் மூலம் நிதி வளர்ச்சி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

அலுவலக வாஸ்து குறிப்புகள்
இந்த உலகமே உறவுகள், உணர்வுகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு பணத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. நிதி (Money) என்பது ஒவ்வொரு தொழிலின் ஆன்மாவாக உள்ளது. பலரும் சொந்த தொழில் செய்ய மிகுந்த விருப்பம் கொள்கின்றனர். இதில் சிலர் தங்கள் தொழில்களுக்கான அலுவலகங்களை தயார் செய்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட அலுவலகம் வாஸ்து சாஸ்திரப்படி (Vastu Shastra in Tamil) எப்படி இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலகத்தின் நுழைவு வாயில் தொடங்கி உரிமையாளர் அறையில் இருக்கும் மேசை வரை (Vastu Tips for Office) என்னென்ன எப்படி இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
பொதுவாகவே அலுவலக சூழல் அமைதியானதாகவும் உற்சாகமாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் செய்யும் வேலையில் மிகச்சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெறும். வாஸ்துவின்படி அங்கு பொருட்களை சரியாக இடத்தில் வைப்பது நிதி செழிப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் முழுமையான நல்வாழ்வையும் மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.
நிதி வளர்ச்சிக்கு உகந்த இடம்
தொழில்முனைவோர் புதிதாக அலுவலகம் தொடங்குகிறார்கள் என்றால் அதில் உங்களுக்கான இடம் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். கிழக்கு திசை சூரிய உதய இடம் என்பதால் நிதி வளர்ச்சிக்கு இது உகந்ததாக அமையும் என நம்பப்படுகிறது. மேலும் மார்க்கெட்டிங், விற்பனையாளர்கள் ஆகியோர் வடமேற்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். அலுவலக கணக்காளர்கள் தென்கிழக்கு மூலையில் அமர்ந்து வடகிழக்கு திசையை நோக்கி பார்த்தால் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
சிறந்த நிதி வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டுமானால் அலுவலகத்தின் வடக்குப் பகுதியின் சுவரில் ஒரு கண்ணாடி அல்லது குபேர யந்திரத்தை வைக்கலாம். உங்களுடைய அலுவலகம் பொருட்கள் தயாரிக்கும் இடமாக இருந்தால் வடகிழக்கு திசையில் தயாரான பொருட்களை குவித்து வைக்கக்கூடாது. வடமேற்கு திசையில் வைத்தால் விரைவில் விற்பனையாகும்.
மிகச்சிறந்த எண்ணத்தை உண்டாக்க வேண்டும்
முக்கியமான நிதி ஆவணங்களை அலுவலகத்தின் தென்மேற்கு பக்கத்தில் பெட்டி அமைத்து வைக்க வேண்டும். அந்த பெட்டியானது வடகிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்.அலுவலக வரவேற்புப் பகுதி தான் புதிதாக வருபவர்களுக்கு மிகச்சிறந்த எண்ணத்தை உண்டாக்கும். அந்த இடத்தை நேர்மறை எண்ணங்களால் சூழப்பட்ட பொருட்களை வைத்து நிரப்புவது சிறந்தது.
அலுவலக நுழைவாயிலில் நான்கு இலை க்ளோவர் செடியை வைக்கலாம். இதனால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அலுவலகத்தில் உள்ள மேசை செவ்வக வடிவில் இருப்பதையும், உயர்தர மரத்தால் ஆனதையும் உறுதி செய்ய வேண்டும். அதன்மேல் இருக்கும் பொருட்கள் ஒழுங்கற்று இருந்தால் குழப்பம், மன அழுத்தம் மற்றும் வேலையில் கவனச்சிதறல் ஆகியவற்றை உண்டாக்கலாம். அதனால் பொருட்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அலுவலக மேசையில் தூங்க வேண்டாம், யாரையும் அனுமதிக்காதீர்கள். இது எதிர்மறை சக்தியை உருவாக்கும். மேசையில் உடைந்த எழுதுபொருட்கள் இருந்தால் தூக்கி எறியவும். ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை செய்ய சரியான இயற்கை அழகுடன் கூடிய புகைப்படங்கள், பெயிண்டிங் ஆகியவற்றை சுவர்களில் இடம்பெற செய்யலாம்.
(Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஆன்மிக மற்றும் வாஸ்து நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. எந்தவொரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு கிடையாது)