Vastu Tips: வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? – வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்!
வாஸ்து சாஸ்திரம் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து செல்வம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெற உதவும் என சொல்லப்படுகிறது. முன் வாசலை சுத்தமாக வைத்திருப்பது, தினமும் விளக்கு ஏற்றுவது, குளியலறையில் சிறிது தண்ணீர் வைத்திருப்பது, கற்பூரம் ஏற்றுவது போன்றவை நல்ல பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது.

வாஸ்து டிப்ஸ்
வாஸ்து சாஸ்திம் (Vastu Shastra) என்பது இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நம்பிக்கையாகும். நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் சரியான இடத்தில் மற்றும் திசையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை வாஸ்துவில் இடம்பெற்றுள்ளது. திசை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட வாஸ்துவானது வீட்டின் நேர்மறை சக்திகளில் (Positive Vibes) தாக்கத்தை ஏற்படுத்தும் என இன்றளவும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டங்களை உறுதி செய்யும் எனவும் சொல்லப்படுகிறது. இது குடும்ப உறுப்பினர்களிடமும் நல்ல விளைவை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சூழல் தேவை. எனவே வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் நம் வீடுகளில் அமைதி, பணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறலாம் என சொல்லப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. விளக்கேற்றுவது தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. விளக்கு என்பது ஆன்மாவின் அமைதியையும் தூய்மையையும் குறிக்கிறது. ஒரு விளக்கு ஏற்றப்படும்போது தீய சக்திகள் அழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைவாள் என்று சொல்லப்படுகிறது.
வீட்டிற்குள் நல்ல ஆற்றல்களை ஈர்க்க முன் கதவு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுவதால் வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்கக்கூடாது. அதனால் வீட்டின் வெளியே சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் கொண்டுவரும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
பலருக்குத் தெரியாத தகவல் ஒன்று உள்ளது. அதாவது வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறையில் எப்போதும் சிறிது தண்ணீர் வைத்திருப்பது நல்லது என்று கருதப்படுகிறது. நீர் என்பது தூய்மை, சுத்திகரிப்பு மற்றும் ஆற்றல் ஓட்டத்தின் அடையாளமாகும். குளியலறையில் தண்ணீர் இருப்பது எதிர்மறை சக்தியை நீக்கி நிதி ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. இது வீட்டின் செல்வத்தைப் பராமரிக்கவும், நல்ல பலன்களை அடையவும் உதவும் என கருதப்படுகிறது.
ஒவ்வொரு இரவும், வீட்டின் வெளியே கற்பூரத்தை ஏற்றி, அதன் புகை வீட்டின் எல்லா மூலைகளையும் சென்றடைவதை உறுதி செய்யுங்கள். இது வாஸ்து சாஸ்திரத்தின் படி எதிர்மறை சக்திகளை வெளியேற்ற உதவுகிறது. கற்பூரம் என்பது தூய்மையின் சின்னமாகும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கும். மனம் அமைதியை உருவாக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.
ஒவ்வொரு இரவும் தெற்கு திசையில் கடுகு எண்ணெயால் விளக்கை ஏற்ற வேண்டும் என வாஸ்து சொல்கிறது. சாஸ்திரத்தின்படி, இந்த திசை முன்னோர்களின் இடம் என்று கூறப்படுகிறது. விளக்கு ஏற்றப்படும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என நம்பப்படுகிறது. இது நம் வீட்டில் நல்ல பலன்களைத் தரும். மகிழ்ச்சி நம் வாழ்வில் இருக்கிறது. இந்த விதிகளைப் பின்பற்றினால், வீட்டில் நல்ல அதிர்ஷ்டம், அமைதி மற்றும் செல்வம் நிலையாக இருக்கும் என கூறப்படுகிறது.