Vastu Tips: வீட்டில் என்ன பூச்செடிகளை வளர்க்கலாம்? – வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் சில குறிப்பிட்ட பூக்களை வளர்ப்பது நேர்மறை ஆற்றல் மற்றும் செழிப்பை அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதேபோல் மல்லிகை, மணி பிளான்ட், செம்பருத்தி, துளசி, ரோஜா, சாமந்தி போன்ற பூக்கள் வீட்டில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

வீட்டில் வளர்க்க வேண்டிய பூக்கள்
வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது மிகப்பெரிய அளவில் தனிமனித வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது. வாஸ்து என்பது நிலங்களை அடிப்படையாக கொண்டது. அதனால் வீடு, அலுவலகம், வீட்டின் அறைகள், தோட்டம் என பல இடங்களிலும் வாஸ்து பின்பற்றப்படுகிறது. அப்படியாக தோட்டத்தில் வாஸ்துபடி என்னென்ன பூக்கள் வைக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். வாஸ்துப்படி வீட்டில் மல்லிகைப்பூ செடி வைப்பது மிகுந்த புண்ணியம் தரும் என சொல்லப்படுகிறது. மல்லிகை என்றாலே அதன் வாசம் நம்மை கவரும். அது வீட்டில் நேர்மறையான எண்ணங்களை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது. மல்லிகை பூ போல வீட்டில் இருப்பவர்களின் குணங்களும் அமையும் என சொல்லப்படுகிறது. அதேபோல் பெரும்பாலானோர்களின் வீட்டில் மணி பிளான்ட் செடி (Money Plant) வளர்க்கப்பட்டு வருகிறது. இயற்கையாகவே காற்றை சுத்தப்படுத்தும் பண்பு கொண்ட மணி பிளான்ட் வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் உண்டாக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனை பரமாரிப்பது எளிதான விஷயமாகும்.
செம்பருத்தி பூ என்பது அனைவரின் தோட்டத்திலும் கண்டிப்பாக வளர்க்கக்கூடிய தாவரமாகும். இந்த தாவரம் காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பூஜையில் பயன்படுத்தப்படும் இந்த பூவானது ஆற்றல் மற்றும் மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. செம்பருத்தி பூவின் நிறம் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
நேர்மறை ஆற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சி
துளசி செடி இந்து மக்களின் புனிதமான தாவரமாக பார்க்கப்படுகிறது. பெருமாளின் அடையாளமாக கருதப்படும் துளசி மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது. இதனால் அது அனைவரின் வீட்டிலும் உள்ளது. இந்த செடியானது காற்றை சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையும் தடுக்கும் என சொல்லப்படுகிறது. அன்பின் அடையாளமாக கருதப்படும் ரோஜா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான பூவாக உள்ளது.
இத்தகைய ரோஜா செடியை வளர்ப்பது மிகவும் எளிமையானது. இதனால் அன்பு, மகிழ்ச்சி, பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. வீட்டின் பூஜையறையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பூக்களில் ஒன்று சாமந்தியாகும். இது வீட்டிற்கு செழிப்பையும், எதிர்மறையான எண்ணங்களை விரட்டும் சக்தி கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.
நேர்மறை ஆற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு தாமரை மலர்கள் சாத்தியமானது என்றாலும் இதனை வீட்டில் வளர்ப்பது சாத்தியமற்றதாகும். விஷ்ணுவின் இருப்பிடமாக அறியப்படும் தாமரை வீட்டில் இருந்தால் அனைத்து பிரச்னைகளும் சரியாகும் என நம்பப்படுகிறது. ஆசியா மற்றும் வடகிழக்கு ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட வற்றாத பூக்கும் தாவரமான கிரிஸான்தமம் நீண்ட ஆயுள் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இது வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அமைதி, மகிழ்ச்சி, நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற லாவெண்டர் மலர்கள் ஒரு வாசனை மிக்க தாவரமாகும். இது மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறது.
(இணையத்தில் பதிவிடப்படும் தகவல்கள் ஆன்மிக அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் எதற்கும் பொறுப்பேற்காது)