Vastu Tips: எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆடைகள்.. எந்த நிறத்தில் அணியலாம்?
வாஸ்து சாஸ்திரம் ஆடை அணியும் முறையிலும் வாழ்க்கையின் சிறப்பான சம்பவங்கள் நடைபெறும் என நம்பப்படுகிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் புதிய ஆடைகள் வாங்குவது நல்லது. சுத்தமான ஆடைகள் நேர்மறை ஆற்றலைத் தரும் என சொல்லப்படுகிறது. அப்படியாக ஆடை தொடர்பான தகவல்களை நாம் காணலாம்.

வாஸ்து சாஸ்திரங்கள் (Vastu Shastra) மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அவை நம் வாழ்க்கையின் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க பங்குகளை வகிப்பதாக நம்பப்படுகிறது. இப்படியான வாஸ்துவானது நிலம் தொடர்புடையதாக இருந்தாலும் சமீப காலமாக அனைத்து விஷயங்களிலும் பின்பற்றப்படுகிறது. அதற்கென தனி பெயர் இருந்தாலும் இவை வாஸ்துவின் அடிப்படையிலேயே அழைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள அறைகள் எப்படி இருக்க வேண்டும், எங்கு என்ன பொருட்கள் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டவை போலவே வாஸ்துவின் படி நாம் ஆடைகள் அணிந்தால் (Vastu Tips for Wearing Cloths) மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆடைகளின் நிறத்தால் ஒருவரின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பது பற்றி நாம் காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே புதிய துணிகள் வாங்குவதற்கு சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து புதன்கிழமை நாம் ஆடை வாங்கலாம். அதே சமயம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் துணிகளை வாங்கினால் அது வீட்டில் வாஸ்து குறைபாட்டை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
எண்ணங்களை பிரதிபலிக்கும் நிறங்கள்
பொதுவாக நிறங்கள் நமது எண்ணங்களை பிரதிபலிப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் பிடிக்கும். அது அவர்களின் குணத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணங்கள் நிலவ வேண்டும் என விரும்பினால் வெள்ளை நிற பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் செல்வம், குழந்தை பேறு உள்ளிட்ட பலன்கள் கிடைக்க மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தால் நல்லது என சொல்லப்படுகிறது. காரணம் மஞ்சள் வெற்றியின் நிறம் என கருதப்படுகிறது.
அதேபோல் வயது சென்றும் திருமணமாகாமல் இருப்பவர்கள் முடிந்தவரை கருப்பு நிறத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது திருமணத்தை தாமதப்படுத்தும் எனவும் ஆரஞ்சு மற்றும் வெளிர் நிறங்களை அணிந்தால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும் எனவும் கூறப்படுகிறது.
துவைக்காமல் ஆடை அணியாதீர்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆடைகளை அணியும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. அதாவது ஒரே மாதிரியான ஆடைகளை மீண்டும் மீண்டும் அணிவதால் அது உடல் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையில் செல்வம் சேமிப்பதையும் பாதிக்கும் என கருதப்படுகிறது. மேலும் சுத்தமானதாக இல்லாமல் அழுக்கு நிறைந்த ஆடைகளை அணிவது உங்களுடைய நிதி நிலைமையை பாதிக்கலாம் என நம்பப்படுகிறது.
சிலர் ஒரே உடையை துவைக்காமல் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை அணிவார்கள் இது வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறானதாகும். சுத்தமான ஆடைகளை அணியும்போது அது தெய்வங்களின் மனதை குளிர்ச்சி அடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. சுத்தமான ஆடைகள் நமது உடலுக்கு நேர்மறை ஆற்றலை தருவதோடு கவனம் சிதறாமல் வேலையில் சிறப்பாக செயல்பட உதவுகிறது
ஃபேஷன் உடைகளில் கிழிந்த நிலையில் இருக்கும் ஆடைகளை அணிவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வறுமையை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. அதேசமயம் கிழிந்த அல்லது எரிந்த துணிகளை வீட்டில் வைத்திருக்காதீர்கள். அது எதிர்மறை ஆற்றலை பரப்பும் தன்மை கொண்டது என நம்பப்படுகிறது.
(இணையத்தில் பதிவிடும் ஆன்மிக மற்றும் வாஸ்து கருத்துகள் அடிப்படையில் இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)