Sanipeyarchi: 2026ல் சனிப்பெயர்ச்சி.. தேதி, நேரத்தை அறிவித்த திருநள்ளாறு கோயில்!
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் 2026 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்போது சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் என தெரிவித்துள்ளது. இதனால் 12 ராசிக்காரர்களுக்கு சாதகம், பாதகமான விளைவுகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சி
காரைக்கால், ஏப்ரல் 15: 2026 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி (Sani Peyarchi) நடைபெறும் தேதியை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் (Thirunallar Saneeswaran Temple) நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்களிடையே இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. பொதுவாக மனிதர்களின் வாழ்க்கை ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் அமைவதாக நம்பப்படுகிறது. இத்தகைய கிரகங்கள் 12 ராசிகளில் தனியாகவோ, அல்லது கூட்டாகவோ சஞ்சாரம் செய்து பல்வேறு சாதகம் மற்றும் பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது. இத்தகைய கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் நாட்கள் தொடங்கி மாதம் வருடம் என சஞ்சரிப்பது வழக்கம். அதன்படி சூரியன், சந்திரன், புதன், வியாழன், செவ்வாய், சனி, சுக்கிரன், ராகு, கேது, ஆகிய ஒன்பது கிரகங்களில் சனி கிரகம் மட்டும் தான் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடிய பகவானாக திகழ்கிறார்.
அந்த வகையில் சனிபகவான் ஒரு ராசிக்குள் சென்றால் கிட்டதட்ட 2 அரை வருடங்கள் அந்த ராசியில் சஞ்சரித்து பல்வேறு விதமான வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். சனி பகவான் பெயர்ச்சி அடைவது சனிப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். காரணம் சனி பகவான் கொடுக்கவும் செய்வார், கெடுக்கவும் செய்வார் என சொலவடை உண்டு. அதனால் சனிப்பெயர்ச்சி என்றாலே ஒருவித கலக்கம் அனைத்து ராசியினருக்கும் வருவது இயல்பு தான்.
மாறிப்போன சனிப்பெயர்ச்சி
இதனிடையே பங்குனி மாதம் 15 ஆம் நாளான 2025 மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்த ராசி பலன்கள், எதிர்கால கணிப்புகள் உள்ளிட்ட செய்திகளும் வெளியாகி ஆன்மீக நாட்டம் கொண்டவர்களை பரபரப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் 2025 மார்ச் 25ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் நிர்வாகம் நடப்பாண்டு சனி பெயர்ச்சி கிடையாது என அதிரடியாக அறிவித்தது. மேலும் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி பார்த்தால் 2026 ஆம் ஆண்டில் தான் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக சொல்லப்பட்டதால் அனைவரும் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த தினத்தில் காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்கள் குழப்பத்தில் இருந்து மீண்டு தெளிவு பெற்றுள்ளனர்.
சனிப்பெயர்ச்சியின் போது குறிப்பிட்ட ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி பகவான் சில ராசிகளில் பாத சனி, ஏழரை சனி, ஜென்ம சனி, விரய சனியாக தாக்கத்தை வெளிப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.