மதங்களை கடந்த மாரியம்மனின் அன்பு.. இந்த கோயிலுக்கு இப்படி ஒரு சிறப்பா?
உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில், அதன் தனித்துவமான சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது. திருப்பூர் சுற்றுவட்டார மக்களின் காவல் நாயகியாக திகழும் இந்த மாரியம்மன் வரலாறு மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் குறித்து நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாடு மக்களால் பரவலாக வழிபாடு செய்யப்படும் பெண் தெய்வங்களில் ஒன்று மாரியம்மன் (Mariamman). தமிழ்நாட்டில் இந்த அம்மனின் பெயரை கொண்டவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். அப்படிப்பட்ட காவல் தெய்வமாக உள்ள மாரியம்மன் பல்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலித்து வருகிறாள். இந்த கோயிலுக்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக திருப்பூர் மாவட்டம் (Tiruppur) உடுமலை அருகே பெரிய கடைவீதியில் கோயில் கொண்டிருக்கும் மாரியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த கோயிலானது தனித்துவமான சிறப்புகளை கொண்டுள்ளது.
இந்த மாரியம்மன் கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும் இந்த கோயிலின் வரலாறு, சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.
கோயில் உருவான வரலாறு
முன்னொரு காலத்தில் மாறாசூரன் என்ற அசுரன் இருந்தான். அவன் மிகுந்த ஆணவம் அகங்காரமும் கொண்டு மூன்று உலகையும் துன்புறுத்தி வந்தான். அவனது தொல்லை தாங்காத தேவர்களும் மனிதர்களும் அன்னை பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அம்மன் கோபத்துடன் மாறாசூரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தலைகீழாக தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி அழித்தாள். இதனைத் தொடர்ந்து தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றும் வகையில் இந்த அம்மனுக்கு மாரியம்மன் என்ற திருநாமம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயிலானது கொங்கு மண்டலத்தில் உடம்பே ஆலயம் என்ற ஆகம விதிக்கு உட்பட்டு அமைந்ததாகும். இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மாரியம்மன் சிலையின் திருமேனி மிகப் பழமையானது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட அந்த சிற்பத்தில் தோளில் நெளியும் நாகம், வலது காதில் ஸ்ரீ சக்கர வடிவத்தில் உள்ள தாடகங்கள், இடது காதில் தோடு, திருமேனியில் பல ஆபரணங்கள் என துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாரியம்மனுக்கு உரிய நட்சத்திரம் மகம் என்பதால் இந்த அம்மன் மகமாரி எனவும் அழைக்கப்படுகிறாள். பொதுவாக மாரியம்மன் என்றாலே உக்கிரமான தோற்றத்துடன் இருப்பாள் என சொல்வார்கள். ஆனால் இக்கோயிலில் ஆவேசம் இல்லாத சாந்த சொரூபினியாக மாரியம்மனை காணலாம்.
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு
மத நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் இந்த கோயிலுக்கு என்று ஒரு கதை உள்ளது. அதாவது முன்பு காலத்தில் இந்த கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தனர். அப்படியான நிலையில் ஒரு தாய் மரணத்தை தழுவும் நோய்வாய்ப்பட்ட தனது 7 வயது மகனை அழைத்து வந்து ஆலய வளாகத்தில் கிடத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தனது மகனுக்கு உயிர் பிச்சை கேட்டு அம்மனிடம் மனதார அழுது வேண்டி வழிபட்டுள்ளார். அவரின் கோரிக்கைக்கு மனம் இறங்கிய மாரியம்மன் அச்சிறுவனை பரிபூரண குணமடைய செய்துள்ளார். இதில் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால் அந்தப் பெண் ஒரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மற்ற கோவில்களில் அபிஷேக காலங்களில் மட்டுமே தீர்த்தம் வழங்கப்படும் நிலையில் இந்த கோயிலில் எல்லா நேரங்களிலும் தரிசனம் முடித்து வருபவர்களுக்கு தீர்த்தமானது வழங்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இக்கோயிலில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்குவதற்கு நாகபூஜை செய்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரிந்த சொந்தங்கள் ஒன்று கூடும் என்றும், மாங்கல்ய பலம், சொத்து பிரச்னை, கல்வியில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, குழந்தைப்பேறு உள்ளிட்ட பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
பஞ்சமி திதியில் பரிகார பூஜை
மேலும் பஞ்சமி திதியில் ஆயில்ய நட்சத்திரத்தில் உள்ளவர்கள் நாகதோஷம் இருந்தால் பரிகார பூஜை இங்கு செய்யலாம். இதனால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் பூவோடு எடுத்தல், மாவிளக்கு, ஒப்பிடுதல் உருவமிடுதல், முளைப்பாரி எடுத்தல் கொண்ட நேர்த்திக் கடன்களை தேர் திருவிழா சமயத்தில் செய்கின்றனர்
இந்த கோயிலில் மாரியம்மனுக்கு கூழும் முருங்கைக் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாரியம்மன் கோயிலில் 15 நாட்கள் தேர் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று கொடியேற்றம் நடைபெற்று அதிலிருந்து சரியாக 15 ஆம் நாள் திருக்கல்யாணமும் தேர் திருவிழாவும் சிறப்புடன் நடைபெறுகிறது. மேலும் பௌர்ணமி மாரியம்மனுக்கு உகந்த தினம் என சொல்லப்படுவதால் அன்றைய தினம் பூஜைகளில் கலந்து கொள்வது மிகச் சிறந்த பலனை தரும் என கருதப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.