பெயரைக் கேட்டாலே மதுரையே அஞ்சும்.. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் சிறப்புகள்!
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அருகே அமைந்துள்ளது. பிரளய காலத்தில் மதுரைக்கு எல்லை காட்டிய ஆதிசேசனின் விஷத்தை உண்டதால் காளியாக எழுந்தருளியதாக கோயில் வரலாறு கூறுகிறது. இங்கிருக்கும் அய்யனார் காளியம்மனுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அடைக்கலம் காத்த அய்யனார் எனவும் அழைக்கப்படுகிறார்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்
தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் அம்மன் கோயில்களை (Amman Temples) காணலாம். ஒவ்வொரு அம்மனும் ஒவ்வொரு வரலாற்றுப் பின்னணியுடன் வெவ்வேறு பெயர்களில் கோயில் கொண்டிருப்பாள். பொதுவாக உக்கிரமான கடவுள்கள் என சில தெய்வங்களை நாம் குறிப்பிடுகிறோம். பெயர்கள் தொடங்கி உருவம் வரை உக்கிரமாக இருப்பதை அப்படி குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் மடப்புரம் பகுதியில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு பத்ரகாளியம்மன் (Pathirakaliamman temple) திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயில் ஆனது காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்தக் கோயில் தேவாரம் பாடிய திருத்தலங்களில் ஒன்றான திருப்புவனாக பூவநாதர் கோயில் அருகே அமைந்துள்ளது.
இந்தக் கோயிலானது உருவான வரலாறை கேட்டால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதாவது ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரமானது வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் அழிந்துவிட்டது. அப்போது மீனாட்சியம்மன் ஈசனிடம் மதுரைக்கு எல்லையை காட்ட வேண்டும் என வேண்டிக் கொண்டாள். அதனை தொடர்ந்து சிவபெருமான் தனது கழுத்தில் இருந்த ஆதிசேசனை எடுத்து வளைத்து மதுரைக்கு எல்லையை உருவாக்கினார். அதன்படி மேற்கே திருவேடகமும், தெற்கில் திருப்பரங்குன்றமும், வடக்கில் திருமாலிருஞ்சோலையும் எல்லையாக அமைந்தது.
அப்படியாக கிழக்கில் தற்போது இருக்கும் மடப்புரத்தில் வாலை வைத்து எல்லையை காட்டினார். இதனை தொடர்ந்து ஆதிசேசன் வாயில் இருந்த விஷத்தை உண்டு அம்மன் இங்கு காளியாக எழுந்தருளியதாக சொல்லப்படுகிறது.
அடைக்கலம் கொடுத்த அய்யனார்
அதே சமயம் இங்கு வீற்றிருந்த அய்யனார் தன் வாகனமாகிய குதிரையை கொடுத்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் கொடுத்தார் என்பது வரலாறாக உள்ளது. இதனால் இவர் அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
கலியுகத்தில் அநீதிகளை அளிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியை கிரீடமாகக் கொண்டு பத்ரகாளியம்மன் தோற்றமளிக்கிறார். வலது கையில் கீழ்நோக்கி இருக்கும் திரிசூலம் அநீதியை அளிக்கவும், தலையில் இருக்கும் அக்னி கிரீடம் அழித்தவற்றை மீண்டும் எழாமல் சாம்பலாக்கவும் செய்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும் தன்னை நாடிவரும் பக்தர்களை எப்போதும் காத்து தனது இருப்பை பத்திரகாளியம்மன் உணர்த்துவதாக நம்பப்படுகிறது. போருக்கு ஆயத்தமான நிலையில் தனது பின்னங்களை ஊன்றி முன்னங்கல்களை தூக்கி பத்ரகாளியம்மனின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் குதிரை நிற்கிறது. மூலஸ்தானத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலில் அம்மனுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்ட குதிரை வாகனம் இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் மற்ற கோவில்களில் குதிரை மீது வீற்றிருக்கும் அய்யனார் இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது என சொல்லப்படுகிறது. அந்த காலகட்டத்தில் மதுரை மாநகரில் மடப்புரம் காளி என்ற வார்த்தையை கேட்டாலே எதிரிகள் கொலை நடுங்குவது வழக்கமாக இருந்துள்ளது.
அப்படியாக இந்த மடப்புரம் காளி கோயில் மிகப்பெரிய அளவில் சுற்று வட்டார மக்களிடையே பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் வேண்டுதல் வைப்பவர்கள் அதனை நிறைவேற்றிய பிறகு அம்மனை குளிர்விக்கும் வகையில் எலுமிச்சம் பழங்களால் ஆன மாலையும், புத்தாடை அணிவித்தும் தங்களது காணிக்கையை செலுத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் செய்வினை, பில்லி, சூனியம் போன்றவற்றை தனது அக்னி கிரீடம் மூலம் இந்த பத்ரகாளியம்மன் சாம்பலாக்கி விடுவதால் பலரும் இவரை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்,
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதே சமயம் பௌர்ணமி அன்று பாலாபிஷேகம், ஒவ்வொரு தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை ஆகியவை இக்கோயிலில் நடைபெறுகிறது. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.
(இந்த கோயில் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வரும் செய்திகள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)