Yoga Narasimhar: பிரதோஷ நாளில் அவதாரம்.. ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில்!

மதுரை ஒத்தக்கடையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோயில், யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். ரோமச முனிவரின் யாகத்தால் உருவான இக்கோயில், பிரதோஷ பூஜைக்குப் பெயர் பெற்றது. நரசிம்மரின் உக்கிரம் தணிந்த தலமாகவும், திருமணத் தடையை நீக்கும் தலமாகவும் இது போற்றப்படுகிறது.

Yoga Narasimhar: பிரதோஷ நாளில் அவதாரம்.. ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில்!

யோக நரசிம்மர் கோயில்

Published: 

17 Apr 2025 17:32 PM

தமிழ்நாடு ஆன்மீக தலங்களுக்கு (Spiritual Places) மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு பல்வேறு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு ஊரில் வெவ்வேறு பெயர் மற்றும் உருவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோயில் (Yoga Narasimhar Temple) பற்றி நாம் காணலாம். இந்தக் கோயில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் யானைமலைக்கு அடியில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 12 கிலோமீட்டர் தொலைவில் ஒத்தக்கடை அமைந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. இந்தக் கோயில் ஆனது காலை 6:00 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்.

ஒத்தக்கடை பகுதியில் நரசிங்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த யோக நரசிங்க பெருமாள் கோயில் ஒரு குடைவரை கோயிலாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 179 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் வரலாறு பற்றி காணலாம்.

கோயில் உருவான வரலாறு

ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டும் என யானைமலையில் இருக்கும் சக்கர தீர்த்தத்தில் புனித நீராடி யாகம் ஒன்றை செய்தார். அப்போது நரசிங்க பெருமாள் அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல் தரிசிக்கும் வாய்ப்பு ரோசம முனிவருக்கு அமைந்தது. அதேசமயம் நரசிம்மர் உக்கிரமாக இருந்ததால் உலகம் வெப்பமயமானது. இதனைத் தொடர்ந்து தேவர்கள் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வேண்டும் என பிரகலாதனிடம் வேண்டிக் கொண்டனர்.

பிரகலாதனும் மகாலட்சுமியும் இணைந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணித்தனர். முதலில் நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக தணியாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து மகாலட்சுமியிடம் தேவர்கள் விஷயத்தை தெரிவித்தனர். உலகை காக்கும் அந்த தாயார் வந்ததும் அவரின் உக்கிரம் தணிந்தது.

கோயிலின் சிறப்பு

பொதுவாக சிவன் கோயில்களில் தான் பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறும். ஆனால் இந்த பெருமாள் கோயிலில் பிரதோஷம் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ நாளில் தான் விஷ்ணு நரசிம்மர் அவதாரம் எடுத்தார். அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி, வியாபாரம் ஆகியவை சிறக்கும் என நம்பப்படுகிறது. அதே சமயம் மரணத்தை பற்றிய பயம், எதிரிகள் பற்றிய அச்சம் ஆகியவை நீங்கும் என நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் தாயாரான நரசிங்கவல்லியை வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்கும், கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் தீர்த்தத்தில் மாசி மாத பௌர்ணமி அன்று கஜேந்திரமூர்த்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை போல இந்த கோயிலிலும் பௌர்ணமி கிரிவலம் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது

நரசிம்மர் அவதரித்துள்ள தலங்களில் மிகப்பெரிய உருவம் உள்ள கோயில் இதுவாகும். இந்த கோயிலில் மூலவரான யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்து காட்சி தருகிறார். அதே போல் நரசிங்கவல்லி தாயார் தெற்கு  பார்த்து  அருள் பாலிக்கிறார். இந்த நரசிம்மர் கோயிலில் கொடிமரம் கிடையாது. கருவறைக்கு மேலே யானைமலை இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இங்குள்ள பெருமாளுக்கு வேண்டுதல் நிறைவேறியவுடன் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

(யோக நரசிம்மர் கோயில் பற்றி கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆன்மிக நம்பிக்கையின்படி வெளியான கருத்துகள் அடிப்படையில் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)