வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!

Kallazhagar Temple: மதுரையின் மிக முக்கியமான ஆன்மிக தலமாக கள்ளழகர் கோயில் திகழ்கிறது. எமதர்ம ராஜனின் தவத்தால் உருவானதாக சொல்லப்படும் இந்த கோயில் ஏராளமான புராண பின்னணியைக் கொண்டுள்ளது. சைவ, வைணவ சமயத்தின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அழகர் கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது.

வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!

கள்ளழகர் கோயில்

Published: 

29 Apr 2025 12:53 PM

மதுரை (Madurai) என்றாலே தூங்காநகரம் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ளது. இந்த நகரத்தின் பெருமை சொல்லும் பல ஆன்மிக தலங்கள் திகழ்கின்றன. குறிப்பாக மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் (Meenakshi Sundareswarar Temple) திருக்கோயில் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இதனைத் தொடர்ந்து கள்ளழகர் கோயில் (Kallazhagar Temple) மிக முக்கிய வழிபாட்டு தலமாக திகழ்கிறது. அழகர் கோயில் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலில் மூலவராக பரமசுவாமி, உற்சவராக சுந்தரராஜ பெருமாள், கல்யாண சுந்தர வல்லி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மதுரை சித்திரை திருவிழா 2025, ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் 2025, மே 17 ஆம் தேதி 20 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த கள்ளழகர் கோயில் பற்றி நாம் காணலாம்.

கள்ளழகர் கோயில் தினமும் காலை 6:00 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4:00 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்தக் கோயிலின் தலவிருட்சம் மரமாக சந்தன மரம் உள்ளது. மேலும் அழகர் கோவிலின் புராண பெயர் திருமாலிருஞ்சோலை என்பதாகும்.

கோயில் உருவான வரலாறு

முன்பொரு காலத்தில் எமதர்மராஜனுக்கு சாபம் ஏற்பட்ட நிலையில் அதனை போக்குவதற்காக பூலோகத்தில் தற்போது இருக்கும் அழகர் மலை என அழைக்கப்பட்ட விருசுபகிரி என்ற மலையில் தவம் செய்தார். ஏழு மலைகளைக் கொண்ட இந்த விருசுபகிரி தவம் செய்த எமதர்ம ராஜனின் பக்தியால் பெருமாள் காட்சி கொடுத்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த எமன் தினமும் ஒரு ஒருமுறையாவது உன்னை பூஜை செய்ய வரம் தர வேண்டும் என கேட்டார் அதன்படி பெரும்பாலும் வரம் கொடுக்க இக்கோயிலில் தினமும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜன் நடத்துவதாக இன்றளவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இப்படியாக அழகர் மலையில் கள்ளழகர் கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலின் சிறப்புகள்

கள்ளழகர் கோயிலில் காவல் தெய்வமாக கருப்பண சுவாமி திகழ்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதி பக்தர்கள்  வழிபட செய்கிறார்கள். பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தெய்வத்தை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் கள்ளழகர் இருப்பதாக மனதார நினைத்து அவருக்கு காணிக்கையாக தானியங்களை செலுத்துகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் கோயிலில் காணிக்கையாக கிடைக்கும் தானியங்கள் தோசையாக சுடப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் ஆகிய 6 ஆழ்வார்களாலும் பாடப்பட்ட முக்கிய திவ்ய தேசமாக கள்ளழகர் கோயில் உள்ளது.

சித்திரை திருவிழாவில் கள்ளழகர்

மதுரையின் மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழா இருக்கும் நிலையில் அதன் நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணமும்,அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

சித்திரை திருவிழாவின் போது அழகர் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர் வழியில் தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார். இதனைத் தொடர்ந்து சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் காட்சி கொடுக்கும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பார்.அழகர் கோவிலில் இருந்து சித்திரை திருவிழாவிற்கு புறப்பட்டு மதுரை வந்து மீண்டும் திரும்பி செல்லும் வரை அவர் சுமார் 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கள்ளழகர் பெயர் வர காரணம்

அது மட்டுமல்லாமல் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் மாசி பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அதாவது சைவத்திற்கு தனி,  வைணவத்திற்கு தனி என விழா என இருந்த நிலையில் அதனை திருமலை நாயக்கர் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமையை போற்றினார். அப்படித்தான் அழகர் கோவிலில் லட்சுமி பெருமாளை கைப்பிடித்தார். அன்று முதல் லட்சுமி கல்யாண சுந்தரவல்லி என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறாள்.

மக்கள் மனதை இவர்களின் திருமண கோலம் கவர்ந்ததால் அன்று முதல் இந்த பெருமாள் கள்ளழகர் எனவும் அழைக்கப்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.

கோயிலின் சிறப்புகள்

மதுரை கள்ளழகர் கோயில் பெருமாளின் 108 திருப்பதிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த கோயிலில் சைவம் வைணவம் என்ற பேதம் இல்லாமல் ஆராதனை நடைபெறுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கள்ளழகரை வழங்கினால் விவசாயம், வியாபாரம், புதிய தொழில், கல்வி, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்திலும் சுபமான செய்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்தக் கோயிலில் மூலவர் சன்னதியில் அணையா விளக்கு அமைந்துள்ளது. மற்ற கோவில்களில் நின்றகோலத்தில் ஆண்டாள் காட்சி கொடுக்கும் நிலையில் கள்ளழகர் கோயிலில் மட்டும் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். பெருமாளின் மங்கள சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.