விபூதி பிரசாதமாக புற்றுமண்.. ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயில் சிறப்புகள்!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயில், 300 ஆண்டுகள் பழமையானது. இந்த மாரியம்மன் வேம்பு மரத்தடியில் சுயம்புவாக காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் பூக்குழி திருவிழா மிகவும் பிரபலமானது. பக்தர்கள் அம்மை நோய், குழந்தை வரம், திருமணம், வேலை வாய்ப்பு போன்ற வேண்டுதல்களுடன் வழிபாடு செய்கின்றனர்.

விபூதி பிரசாதமாக புற்றுமண்.. ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயில் சிறப்புகள்!

பண்ணாரி மாரியம்மன்

Published: 

25 Apr 2025 12:22 PM

வேம்பு மரத்தை தல விருட்சமாக கொண்ட மாரியம்மன் (Mariamman Temples) ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அருள்பாலிக்கிறார். எந்தவித பேதமுமின்றி இந்த மாரியம்மனை நாடி வரும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். கோடை காலத்தில் வெக்கை நோய் நம்மை தாக்காமல் மழை (மாரி) பெய்ய வேண்டும் என பலரும் வேண்டுவார்கள். அப்படியாக மழை (மாரி) தந்த அம்மனே மாரியம்மனாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் ஒவ்வொரு ஊரிலும் காவல் தெய்வமாக குடிகொண்டுள்ள மாரியம்மன் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்ற ஊரில் பண்ணாரி அம்மனாக  (Sri Bannari Mariamman) காட்சித் தருகிறார். இந்த கோயில் தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா மாநில மக்களிடையேயும் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.

இந்த பண்ணாரி மாரியம்மன் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். சத்தியமங்கலத்தில் இருந்து இந்த கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ள நிலையில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் கூட்டத்தை நாம் காணலாம். இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த இந்த கோயில் உருவான வரலாறு பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் பார்க்கலாம்.

கோயில் உருவான வரலாறு 

இந்த கோயில் 300 வருடங்களுக்கு முன்னால் உருவானதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்டிருந்தனர். அப்படியாக கோயில் அமைந்திருந்த இந்த இடம் வனப்பகுதியாக இருந்துள்ளது. ஒரு நாள் ஆடு மாடுகளை மேய்க்க வந்த ஒருவன் கூட்டத்திலிருந்து ஒரு காராம் பசு தனியாக தினம்தோறும் பிரிந்து சென்று சிறிது நேரத்தில் திரும்பி வருவதை கவனித்தான். மறுநாள் அந்த பசுவை பின் தொடர்ந்து சென்று பார்க்கையில் அது ஒரு வேங்கை மரத்தின் அடியில் புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பால் சுரப்பதை கண்டு வியந்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து அந்த மேய்ப்பன் நேரடியாக ஊர் மக்களிடம் சென்று நடந்ததை தெரிவிக்க அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சுத்தம் செய்துள்ளனர். அங்கு சுயம்புலிங்க திருவுருவம் ஒன்று இருப்பதை கண்டார்கள். அப்போது பொதுமக்களில் ஒருவருக்கு அருள் வந்துள்ளது.  கேரளாவிலிருந்து பொதி சுமக்கும் மாடுகளை மைசூருக்கு கொண்டு செல்லும் மக்களுக்கு வழி துணையாக நான் வந்தேன்.  எழில் மிகுந்த இவ்விடத்தில் தங்கி விட்டேன்.  என்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் எனப் போற்றி வழிபடுங்கள் என அருள் வாக்கு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறியதாக குடில் அமைத்து வழிபட தொடங்கினர். காலப்போக்கில் பண்ணாரி அம்மனின் அருள் பல்வேறு பகுதிகளிலும் பரவத் தொடங்கி இப்போது மிகப் பிரபலமான மாரியம்மன் கோயிலில் ஒன்றாக உள்ளது.

கோயிலின் சிறப்புகள் என்னென்ன?

சுயம்புவாக உருவான மாரியம்மன் என்பதால் இந்த கோயிலில் புற்று மண் தான் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. தெற்கு திசை நோக்கி இருக்கும் இந்த அம்மனுக்கு பக்தர்கள் பெரும்பாலானோர் பூக்குழி (தீமிதி) இறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலின் பூக்குழி திருவிழா மிகப் பெரிய அளவில் புகழ்பெற்றது.

சுமார் 8 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி வேண்டுதலை நிறைவேற்ற பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பது பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும்.

இந்த கோயிலில் பக்தர்கள் அம்மை நோய் தீரவும், குழந்தை வரம், திருமண வரன்,  வேலை வாய்ப்பு, கல்வியில் வளர்ச்சி, தொழில் லாபம் என பல முக்கியமான வேண்டுதல்களை வைக்கின்றனர்.  இவை அனைத்தும் பண்ணாரி அம்மனால் நிறைவேற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக உடல் உறுப்புகள் பதிந்த உருவத்தகடுகள் வாங்கி அர்ச்சனை செய்து உண்டியலில் போட்டு விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாரியம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாற்றுதல், கிடா வெட்டுதல் என பல்வேறு நேர்த்தி கடனையும் செலுத்துகிறார்கள்.

பங்குனி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் இந்த பூக்குழி திருவிழாவில்  சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதனை தவிர்த்து செவ்வாய், வெள்ளி,அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.  வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.