Nataraja Temple: உலகிலேயே உயரமான நடராஜர் சிலை.. தமிழ்நாட்டில் இந்த கோயில் தெரியுமா?
இந்த நடராஜர் கோயிலில் தான் உலகின் உயரமான நடராஜர் சிலை (10 அடி 1 அங்குலம்) உள்ளது. அதுமட்டுமல்லாமல் 63 நாயன்மார்களுக்கான தனிக்கோயில், பளிங்கு சபை, வித்தியாசமான நவகிரக மண்டபம் போன்ற சிறப்புகளும் அமையப் பெற்றுள்ளது. கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளைப் பற்றி காணலாம்.

நெய்வேலி நடராஜர் கோயில்
பொதுவாக தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு (Natarajar) என்று தனி சன்னதி உள்ளது. சிவனின் தோற்றங்களில் ஒன்றான நடராஜர் மும்மூர்த்திகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். நடனத்துக்கு அரசன் என்பதே நடராசர் என அழைக்கப்பட்டு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு ஊரில் உள்ள நடராஜர் கோயிலில் உலகின் உயரமான சிலை உள்ளது என்பதை பலரும் அறியாத விஷயமாகும். அந்த கோயில் எங்கு உள்ளது அதன் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி காணலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியில் தான் அந்த நடராஜர் கோயில் உள்ளது. நெய்வேலி (Neyveli Township) என்றவுடன் பலருக்கும் நிலக்கரி சுரங்கம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு கோயில் கொண்டிருக்கும் நடராஜர் “அழகிய திருச்சிற்றம்பலமுடையான்” என அழைக்கப்படுகிறார். நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் இந்த கோயிலானது அமைந்துள்ளது. இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
பொதுவாக நடராஜர் என்றால் பலருக்கும் சிதம்பரம் தான் நினைவுக்கு வரும். அத்தகைய சிதம்பரம் கோயிலில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிவபெருமான் எழுதி மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல இந்த திருவாசகத்தை எழுதியது திருச்சிற்றம்பலமுடையான் என கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார். இதன் அடிப்படையில் உருவான இந்த கோயிலுக்கு அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் நடராஜர் இடது காலை தூக்கி நடனமாட அவரது நடனத்திற்கு ஏற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி அருள் பாலிக்கிறார். அதனால் இந்த கோயிலின் அன்னை ஓசை கொடுத்த நாயகி என அழைக்கப்படுகிறார்.
கோயிலின் சிறப்பு
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் நாயன்மார்களுக்கான தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு தனிக்கோயிலே உள்ளது. சிவபெருமான் தன்னைவிட தன் அடியார்களை வழிபடுவதை தான் பெரிதும் விரும்புவார். அதன் அடிப்படையிலேயே இங்கு 63 நாயன்மார்களுக்கும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சிவாலயங்களில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் இந்த நாயன்மார்கள் இங்கு ஒன்பது கலசங்களுடன் திருத்தொண்டர் கோயிலில் அருள் பாலிக்கின்றனர்.
பக்தர்கள் தங்களுடைய பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாயன்மார்களை வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கோயிலில் விநாயகர், பார்வதி, சந்திரசேகரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கும் சிலைகள் இருக்கிறது.
பளிங்கு சபை
நடராஜர் ஐந்து சபைகளில் நடனமாடிய வரலாறு உள்ளது. சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளி சபை, திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரை சபை, திருவாலங்காட்டில் இரத்தின சபை இருப்பது போல இங்கு நடராஜர் ஆடும் சபையானது பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடராஜர் சன்னதியின் மேற்கில் செம்பொற்சோதிநாதர் சன்னதி அமைந்திருக்கிறது. இவரின் நெற்றியில் மூன்று கோடுகள் விபூதி பட்டைப் போல் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனை அபிஷேகத்தின் போது பக்தர்கள் காணலாம். மேலும் மரம் வளர்த்த நாயகி, அஷ்டப்புஜ துர்க்கை, அண்ணாமலையார், தென்முகக் கடவுள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இக்கோயிலில் அருள் பாலிக்கின்றனர்.
நவகிரக மண்டபம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே கல்லிலான வட்ட வடிவத்திலான தேரில் சூரியன் நடுவில் தாமரை வடிவில் அமர்ந்திருக்க மற்ற கிரகங்கள் எட்டு திசை பார்த்தபடி தவக்கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இந்த தேரை ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் தேர் பாகன் ஓட்டுவது போல உள்ளது.
மனுநீதி உரை பேட்டி
கோயிலில் நுழைவுப் பகுதியில் கிழக்கு பக்கமாக ஆராய்ச்சி மணியும், மனுநீதி பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை இதில் எழுதிப் போட்டு மூன்று முறை மணியை அடிப்பார்களாம். இந்த மனுக்கள் தினமும் அர்ச்சகரால் பூஜையின் போது நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்ட பின் எரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயிலில் உள்ள நடராஜர் சிலை உலகின் உயரமான சிலையாகும். இதன் உயரம் 10 அடி ஒரு அங்குலமாகும். அதன் அகலம் 8 அடியாகும் இச்சிலை அருகில் இருக்கும் சிவகாமி அம்பாளின் சிலை 7 அடி உயரம் கொண்டதாகும். இந்த கோயிலுக்கு வாய்ப்பு கிடைத்தால் போய் வாருங்கள்.