Veera Anjaneyar: குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா?
புதுப்பாக்கம் மலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலின் வரலாறு மிக சிறப்பானது. லட்சுமணனுக்கு சஞ்சீவினி கொண்டு வந்த ஆஞ்சநேயர் இங்கு சந்தியா வந்தனம் செய்ததாகக் கூறப்படுகிறது. 108 படிகள் கொண்ட இந்தக் கோயிலில், ஆறடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் ராமநவமி இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆன்மிகத்தில் கடவுள் பக்திக்கும், விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்பவர் ஆஞ்சநேயர். அனுமன், மாருதி என பல பெயர்களில் அழைக்கப்படும் அவர் வாயு பகவானுக்கும், அஞ்சனா தேவிக்கும் மைந்தனாக பிறந்தவர். ராமாயணத்தில் ஆஞ்சநேயர் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் இராமரின் மிகச்சிறந்த பக்தராவார். சைவ சமயத்தில் சிவனின் மறு அவதாரமாக கருதப்படும் அவர், வைணவத்தில் திருமாலின் சிறிய திருவடி என போற்றப்படுகிறார். இப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு சைவ மற்றும் வைணவ திருத்தலங்களில் தனி சன்னதியே உள்ளது. மேலும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறவும் செய்கிறது. இதனைத் தவிர்த்து அவர் பல்வேறு இடங்களில் தனியே கோயிலும் கொண்டுள்ளார். அப்படியாக சென்னை புதுப்பாக்கத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயில் பற்றி காணலாம்.
புதுப்பாக்கம் பகுதியில் மலை மீது இந்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
கோயிலின் வரலாறு
ராமருக்கும் ராவணனுக்கும் இடையே யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது ராம மந்திரத்தை தாரகமாக கொண்டு வானர சேனைகள் வெற்றி மேல் வெற்றி பெற்றது. ராவணனின் படைகள் நாளுக்கு நாள் குறைந்த நிலையில் அவனது தம்பிகள் தளபதிகள் என பலரும் போரில் மாய்ந்தனர். இதனால் நிலைமையைக் கண்டு கலங்கிப்போன ராவணனுக்கு ஆறுதல் சொன்ன அவனது மகன் இந்திரஜித் மறுநாள் போருக்கு சென்றான். வித்தைகள் பல கற்ற அவன் லட்சுமணன் உடன் போரிடும் போது ராம சேனையை முறியடிக்க நாகாஸ்திரம் ஏவுகிறான். இதனால் சாதாரண மனிதனைப் போல் பேச்சு மூச்சு இன்றி லட்சுமணன் கிடந்தான்.
அவனது சேனைகளும் நாகாஸ்திரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த இடத்தில் ராமர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய இருவர் மட்டுமே பாதிக்கப்படாதவர்களாக இருந்தனர். இவர்களை பிழைக்க வைக்க சஞ்சீவி மலையில் உள்ள சஞ்சீவினி மூலிகையை கொண்டு வரவேண்டும் என ராமர் சொல்ல உடனடியாக சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். அப்படியாக வரும் வழியில் வங்கக் கடலின் ஓரத்தில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் எனப்படும் நித்திய கர்மா செய்ய ஆஞ்சநேயர் வந்து இறங்கிய இடம் தான் புதுப்பாக்கம் என சொல்லப்படுகிறது.
கோயிலில் மற்ற சிறப்புகள்
இந்தக் கோயிலில் ஆறடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். மலையடிவாரத்தில் ஆனைமுகனும் அதனை தொடர்ந்து நவகிரக சன்னதியும் தரிசித்த பின்னர் 108 படிகள் ஏறி சென்றால் கஜகிரி எனப்படும் வீர ஆஞ்சநேயரை நாம் காணலாம். அவருக்கு எதிராக சீதா மற்றும் லட்சுமணனுடன் ராமபிரான் அருள் பாலிக்கிறார். சஞ்சீவி மலை வடக்கு பக்கமாக இருப்பதால் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி முகத்தை வைத்து காட்சி தருகிறார்.
ஆனால் அவரது உடல் கிழக்கு நோக்கி இருக்கிறது.. வலது பாதத்தை தரையில் ஊன்றி இடது பாதத்தை பறப்பதற்கு தயாராக உயர்த்தி இருக்கும்படி உள்ளார். ஒரு கையை பக்தருக்கு அபயம் காட்டவும் மறுக்கை இடைமேல் இருக்கவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு நித்திய கர்மாவை முடித்துவிட்டு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை கொண்டு சென்று கொடுத்தார். இதனால் லட்சுமணன் மற்றும் அவனது சேனைகள் உயிர் பிழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமாயணம் காலத்தில் வியாச மகரிஷி அனுமன் இங்கு வந்ததை அறிந்து கோயில் எழுப்பினார். அவர் மொத்தம் 108 கோயில்களை உண்டாக்கியதன் நினைவுதான் இங்கு 108 படிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு இந்த புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் தான் பதிவேட்டை தளமாக திகழ்கிறது.
இந்த ஆஞ்சநேயர் கோயிலில் எது வேண்டிக் கொண்டாலும் அதே வெற்றிகரமாக நடக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் வெண்ணெய் காப்பு மற்றும் வெற்றிலை மாலை சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த கோயிலில் அனுமன் ஜெயந்தி மற்றும் ராமநவமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.