Temple Special: அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவன் கோயில்!
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக பார்க்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் அமைந்த இந்த ஆலயத்தில் வழிபடுவதால் நோய் நீங்கும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜல்லிகை என்னும் அசுரப் பெண்ணின் பக்தியினால் இந்த கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் வழிபாட்டு தலங்களுக்கு (Religious Sites) பஞ்சமில்லை. திரும்பும் திசை எங்கும் ஏதேனும் ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து நம்மை எப்போதும் பாசிட்டிவாக உணர வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் மனித வாழ்க்கையை பொருத்தவரை அது 9 கிரகங்களின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றங்கள் ராசிகளில் அமைய பெற்றுள்ள நட்சத்திரக்காரர்களை தனித்தனியாக பலன்களை கொடுக்கிறது. அதே சமயம் அதற்கான பரிகாரங்களும் சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் அஸ்வினி நட்சத்திரத்தில் (Star Ashwini) பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஒரு கோயிலை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்
அந்த கோயில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் தான். இந்த கோயிலானது காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
அம்பிகை செய்த செயல்
கோயில் உருவான வரலாறு என பார்த்தால் அரக்க குலத்தில் பிறந்த ஜல்லிகை என்பவள் சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். ஆனால் அவளுக்கு விருபாட்சன் என்ற மனிதனை விழுங்கக்கூடிய அசுரன் கணவனாக அமைந்தான். ஒரு முறை அந்தண சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு திதி செய்வதற்காக கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது விருபாட்சன் அச்சிறுவனை விழுங்கி முடிவெடுக்கிறான். இதனை கண்டிக்கும் ஜல்லிகை அந்தணர்களை உண்டால் அந்த உணவு விஷமாகிவிடும் என எச்சரிக்கிறாள்.
ஆனால் விருபாட்சன் மனைவி பேச்சைக் கேட்காமல் சிறுவனை விழுங்கினான். இதனை தொடர்ந்து அவன் விஷமேறி உயிரிழந்தான். இதனைக் கண்டு பதறிப்போன ஜல்லிகை உடனடியாக திருத்துறைப்பூண்டி சிவனை நோக்கி வணங்குகிறாள். மேலும், “என் கணவன் நல்லவன் கிடையாது. ஆனால் அவனின்றி நான் வாழ முடியாது. அவனது அரக்க குணத்தை மாற்றி இரக்க குணம் உள்ளவராய் இந்த உலகில் பிறக்கச் செய்ய வேண்டும். இல்லையேல் இப்பிறவிலிருந்து தனக்கு விடுதலை கொடுத்துவிடு என வேண்டினாள்.
அவளின் துயரத்தை கேட்டு இறைவனின் துணைவி பெரியநாயகி மனமிறங்கி காட்சி அளிக்கிறாள். அவளின் அருளால் விருபாட்சன் உயிர் பிழைத்தான். அதுமட்டுமல்லாமல் அவன் விழுங்கிய அந்தண சிறுவனும் உயிர் பெற்றான். பின்னர் அந்த சிறுவன் அம்பிகையிடம் விதி முடிந்த பிறகு மீண்டும் என்னை உயிர்ப்பித்ததன் காரணம் என்ன? என கேட்டான். அதற்கு அம்பிகை, “யார் ஒருவர் தந்தை இறந்த பிறகும் ஆண்டுதோறும் அவருக்கு சரியாக திதி கொடுத்து வருகிறாரோ எனது அருள் நிச்சயம் உண்டு” என தெரிவித்துள்ளார.
மேலும் ஜல்லிகையை நோக்கி, “நீ அசுர குலத்தவள் என்றாலும் சிவபக்தியும் நற்குணமும் கொண்டிருந்தாய். அதனால் எந்த பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மலர்ந்த முகத்துடன் கனவில் ஆயுளை விரும்புகிறாரோ அவள் சுமங்கலியாய் வாழ வழிவகை செய்வேன். மேலும் கணவனின் ஆணவத்தையும் அகற்றுவேன்” என தெரிவித்து மறைவதாக வரலாறு உள்ளது.
கோயிலின் சிறப்பு
பொதுவாகவே அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு மருத்துவ சக்தி அதிகம் உண்டு என சொல்லப்படுகிறது. அத்தகைய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயிலாக இந்த பிறவி மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இவர்கள் தன் வாழ்நாளில் இக்கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்தால் நோயற்ற வாழ்வை பெறலாம் என நம்பப்படுகிறது.
இந்த கோயிலில் வழிபட்டால் திருமண தடை நீக்கம், குழந்தை பாக்கியம், கல்வியில் வளர்ச்சி ஆகியவை பெறலாம் என நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் மேற்கு நோக்கி பிறவி மருந்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார். அதே சமயம் சிவனின் அம்சமாக உள்ள கஜசம்ஹார மூர்த்தியை அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் வழிபட்டு வந்தால் மனதில் இருந்த ஆணவம் நீங்கி சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா மற்றும் நவராத்திரி திருவாதிரை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
( இக்கோயில் பற்றி சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உலாவும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)