Navagraha Temple: சீதையை மீட்கும் முன் ராமன் வழிபட்ட கோயில் பற்றி தெரியுமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் நவபாஷண நவக்கிரக கோயிலுக்குப் பிரசித்தி பெற்றது. இக்கோயில், ராமர் இலங்கைக்குப் பாலம் அமைப்பதற்கு முன்பு விநாயகரை வழிபட்ட இடமாகக் கருதப்படுகிறது. மகிஷாசுரன் வதம் மற்றும் ராமரின் விநாயகர் பூஜை ஆகிய இரண்டு வரலாற்று நிகழ்வுகளுடனும் இக்கோயில் தொடர்புடையது.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் (Rameswaram) என்பது ஆன்மிகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய இடமாகும். ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில் அமைந்திருக்கும் ராமநாதசுவாமி (RamanathaSwamy) திருக்கோயிலுக்கும் அங்கிருக்கும் அக்னி தீர்த்த கடலுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்தகைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள இடம் தான் தேவிபட்டினம். இங்கு நவபாஷான நவக்கிரக கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது கடல் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. ராமர் இலங்கையை அடைய பாலம் கட்டியதாக கூறப்படும் நிலையில் அதனை கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷணமிட்ட தலமாக தேவிப்பட்டினமாக அழைக்கப்படுகிறது.
கோயில் உருவான கதை என வரலாறு இரண்டு நிகழ்வுகளை குறிப்பிடுகிறது. ஒன்று, முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அரக்கன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் இருந்த தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தினான். அவனது துன்பம் தாளாமல் பயந்து போன தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியாக பராசக்தி தேவியிடம் தங்களை காக்கும்படி முறையிட்டனர். உடனே பராசக்தி தேவி அரக்கனுடன் யுத்தம் செய்து தொடங்கினாள்.
அதைக் கண்டு மகிஷாசுரன் பயந்து போய் தேவிபட்டினத்தில் இருக்கும் சக்கர தீர்த்தத்தில் மறைந்து கொண்டான். சக்கர தீர்த்தத்தினை தன் சக்தியால் வற்றியபடி செய்த பராசக்தி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு சாப விமோசனம் தந்தாள். இதனைக் கண்டு அகமகிழ்ந்த தேவர்கள் அமிர்தத்தை பொழிய தர்ம தேவதையும் அருள் வழங்கினாள். அன்றைய நாள் முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக மாறியது.
ராமன் செய்த விநாயக பூஜை
அது மட்டுமல்லாமல் ராவணன் தேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்பட்டு விடக்கூடாது என படைக்கும் கடவுளான பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதற்கான வரத்தையும் பெற்றான். ஆனால் தனக்கு மனிதனால் மரணம் ஏற்படக்கூடாது என ராவணன் கேட்காத நிலையில் தான் ராம அவதாரம் தோன்ற காரணமாக அமைந்தது. ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
சீதையை மீட்க சென்ற ராமன் தேவ சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பு விநாயகர் பூஜை நவகிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமனும் உப்பு படிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்து வழிபட்டார். தற்போது அந்த இடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் என அழைக்கப்படுகிறது. அங்கு இருந்த வெயிலுக்கந்த விநாயகர் தற்போது 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவிபட்டினத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்தக் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், முன் ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் நீங்க, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், கல்வி, செல்வம் பெருக வேண்டி மக்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியவுடன் நவதானியங்கள் படைப்பதோடு மட்டுமின்றி நவகிரக வலம் வருகின்றனர்.
இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் இங்குள்ள தீர்த்தக்கடலில் புனித நீராடுவது சிறப்பான ஒன்றாகும். எல்லா நாட்களிலும் காலை 4:30 முதல் மாலை 6:30 வரை புனித நீராடலாம். ராமேஸ்வரம் சென்றால் மறக்காமல் இக்கோயிலுக்கு சென்று வாருங்கள்.