சாமியை சுற்றிலும் வேல் ஊன்றி வைக்கும் பக்தர்கள்.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

விவசாயிகளின் முக்கிய தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் போற்றப்படும் இக்கோயிலில், தைப்பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வேல் காணிக்கை செலுத்துவதும், மஞ்சள் காணிக்கை செலுத்துவதும் இங்கு முக்கியமான வழிபாட்டு முறைகளாகப் பார்க்கப்படுகிறது.

சாமியை சுற்றிலும் வேல் ஊன்றி வைக்கும் பக்தர்கள்.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

கோட்டை முனீஸ்வரன்

Published: 

24 Mar 2025 12:00 PM

பொதுவாக முனீஸ்வரர் சாமி (Muneeswaran) என்பது நாம் அனைவரும் அறிந்த வகையில் காவல் தெய்வமாகும். முனிவர்களின் ஈஸ்வரனாக திகழ்ந்ததால் இவர் முனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். முனி, முனியாண்டி, முனியப்பன் என பல வகையில் முனீஸ்வரரை அழைப்பார்கள். ரிக் வேதத்தை பொறுத்தவரை முனி என்றால் தெய்வ அம்சம் நிறைந்த ஆவேசமானவர். பயமற்றவர் என்பது பொருளாகும். அப்படியான முனிஸ்வரன் ஊரெல்லாம் எல்லையில் கோயில் கொண்டிருப்பார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளை கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரன் (Kottai Muniswaran) கோயில் பற்றிக் காணலாம். இந்த கோயிலானது காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

அந்த ஊரின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலில் வலப்புறத்தில் கோட்டை முத்தாலம்மனும், இடதுப்புறத்தில் கோட்டை முனீஸ்வரரும் அருள்பாலித்து வருகின்றனர். அதனைத் தவிர்த்து விநாயகருக்கும் தனி சன்னதி உள்ளது.

கோயில் உருவான வரலாறு 

மூக்கலவர் பள்ளியப்ப நாயக்கன் என்ற மன்னன் திண்டுக்கல் அருகே இருக்கும் வேடசந்தூர் உள்ளிட்ட சில பகுதிகளை ஆண்டுவந்தான். இவர் தன்னுடைய கோட்டையை சுற்றிலும் முனீஸ்வரரை காவல் தெய்வமாக வைத்து வணங்கி வந்துள்ளார். மேலும் முனீஸ்வரருடன் முத்தாலம் அணியும் பிரதிஷ்டை செய்து வழிபட இருவரும் கோட்டைக்கு அரணாக இருந்து காவல் காத்து வந்துள்ளார்கள். மூக்கலவர் வள்ளியப்ப நாயக்க மன்னன் இறந்த பின்பு அந்த ஊரில் இருந்து மக்கள் அனைவரும் அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்று வாழத் தொடங்கினார்கள். அப்படியாக முனீஸ்வரரும் முத்தாலம்மன் ஆகிய இருவரும் வேடசந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளைய கவுண்டனூர் பகுதியில் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.

கோயிலைச் சுற்றி வேல் வைக்கும் மக்கள்

இந்த கோயில் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் விவசாய பூமி என்பதால், அங்குள்ள மக்களின் உழைப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் எந்தவித பங்கமும் இல்லாத அளவிற்கு விளைச்சல் அமோகமாக நடக்க முனீஸ்வர சுவாமி ஒருபோதும் குறை வைத்தது இல்லை என மக்கள் இன்றளவும் வியந்து கூறுகின்றனர். பூச்சிகள் பயிர்களை தாக்காமல் காவலாக இருந்து காப்பாற்ற வேண்டும் என விதை நெல்லை சன்னதியில் வைத்து வேண்டிய பின்பே வயலில் விதைக்கும் படலம் தொடர்கிறது.

அதேபோல் தை பிறந்ததும் மூன்று நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். முதல் நாள் வீட்டிலும் மறுநாள் கோயிலிலும் பொங்கல் வைத்து அப்பகுதி மக்கள் வழிபடுகிறார்கள். கால்நடைகளுக்கும் அந்த உணவானது வழங்கப்படுகிறது. மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் முனீஸ்வரர் சன்னதியில் வைத்து வழிபாடு செய்யப்படும். இதனை அடுத்து மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறுவதோடு உறியடி திருவிழாவும் களைக்கட்டும்.

திருமணத்தடை, விவசாயத்தில் பிரச்சனை தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளால் அவதிப்படுவோர் இங்கு வந்து வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டினால் விரைவில் பிரச்சனை தீரும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மேல் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறும். அதேபோல் அம்மனுக்கு விளைச்சல் நடக்கும்போது மஞ்சள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. இந்த கோட்டை முனீஸ்வரை வணங்கிவிட்டு எதை தொடங்கினாலும் அவர் சீரும் சிறப்புமாக நடைபெறும் என பக்தர்கள் ஐதீகமாக பார்க்கின்றனர்.