Viswavasu Year 2025: மாற்றம் நிகழுமா? – கடக ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள்!
2025 ஆண்டு தமிழ்ப்புத்தாண்டில் பிறக்கப்போகும் விசுவாவசு காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ராசிக்கு சந்திரன் 4ம் ஸ்தானத்தில் இருப்பதால் நன்மைகள் அதிகமாக பார்க்கப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி, புதிய வாகனம், வீடு, வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும் வாய்ப்பு உள்ளது.

கடக ராசிக்கான பலன்கள்
பொதுவாகவே கடக ராசிக்காரர்கள் (Cancer Zodiac) அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு பிறக்கப்போகும் விசுவாவசு ஆண்டு (தமிழ்ப் புத்தாண்டு) (Tamil New Year 2025) எப்படி அமையும் என காணலாம். ராசிக்கு 4ம் ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கப் போகிறது. இதனால் உங்களுடைய பேச்சில் கம்பீரம் பிறப்பதோடு அனைவரும் அதனை மதிக்கும் சூழல் உண்டாகும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவினர்களிடையே நிலவி வந்த பிரச்சனையானது முடிவுக்கு வரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அமைவதோடு வீடு மாறும் யோகமும் உண்டாகும். அடைக்க முடியாத பழைய கடன் ஒன்றை கொடுத்து முடிக்கும் அளவுக்கு வருமானம் இந்த காலகட்டத்தில் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
அனைத்து விஷயங்களிலும் போராட்டங்கள் இருந்தாலும் வெற்றி உங்கள் பக்கம் இருப்பதற்கான சாதகம் உள்ளது. நட்பு வட்டம் விரிவடையும். அதேசமயம் வெளிவட்டாரத்தில் அனைவராலும் மதிக்கும் சூழல் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆன்மீக தலங்களுக்கு சென்று வர சூழல் உருவாகும். குலதெய்வ பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள்.
ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது
கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அவை உடனே நீங்கும். எந்த விஷயமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. பிள்ளைகளின் திருமணம் கைகூடும். புதிய ஆண்டில் செலவுகள் அதிகரித்தாலும் அவை யாவும் சுப செலவுகளாகவே இருக்கும். சோர்வு களைப்பு இருந்த நிலையில் அவை நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவீர்கள்.ராகு கேதுவின் சஞ்சாரம் மே 18ஆம் தேதி முதல் இருப்பதால் பேசும் வார்த்தைகள் கவனம் செலுத்துங்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். உங்களை சுற்றி உள்ளவர்களிடம் எந்தவிதமான வாக்குறுதியும் தந்து சிக்கிக் கொள்ள வேண்டாம்.
உரிமை எடுத்துப் பேசுகிறோம் என தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். எதிர்பாராத பண வரவுகள் இருக்கும் நிலையில் வெளியூர் பயணங்களும் உண்டாகும்.
பெண்களுக்கான பலன்கள்
மிதுன ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த காலகட்டம் பிள்ளைகளால் மன நிம்மதியை உண்டாக்கும். நகை வாங்கும் யோகம் அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் உங்களைப் பற்றிய பெருமை பேசும் நேரமாக அமையும். திருமணம் ஆகாத பெண்களுக்கு வரன்கள் அமையும். மாணவ மாணவிகள் உயர்கல்வியில் வெற்றி அடைவார்கள்.
வேலையில் நடைபெறும் மாற்றம்
வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவதற்கான காலமாக விசுவாவசு ஆண்டு அமையும் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பார்ட்னர்கள் இடையே போட்டிகள் இருந்தாலும் அவை நினைத்து கவலைப்பட வேண்டாம். எல்லாம் சாதகமாகவே இருக்கும். பணியிடங்களில் உண்டாகும் சவால்களைக் கடந்து அனைவரும் வியக்கும் படியான செயல்களில் ஈடுபடுவீர்கள். இதுவரை உங்களுக்கு தொந்தரவாக இருந்த விஷயங்கள் மாற்றம் பெறும்.
சம்பள உயர்வு பணி உயர்வு ஆகியவை கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் தேடி வரும். இந்த தமிழ் புத்தாண்டு நீங்கள் சாதிக்கக்கூடிய வருஷமாக அமையும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு உங்களால் முடிந்த தானம் செய்து புண்ணியம் பெறுங்கள்.
(இணையத்தில் பதிவிடப்படும் ஜோதிட தகவல்கள் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)