Tamil New Year 2025: மேம்படும் வாழ்க்கை.. விசுவாவசு ஆண்டில் துலாம் ராசி பெறும் பலன்கள்!
தமிழ் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான குரு பெயர்ச்சியால் சுப காரியங்கள் விரைவடையும் என சொல்லப்படுகிறது. குடும்பத்தில் ஒற்றுமை, சேமிப்பு அதிகரிப்பு, தொழிலில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் என பல நல்ல விஷயங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அவசர முடிவுகளை தவிர்த்து, பக்குவமாக செயல்படுவது முக்கியம். மேலும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

விசுவாவசு தமிழ் புத்தாண்டு அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிட கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் உழைப்பு, நேர்மை, சேமிப்பு உள்ளிட்ட குணங்களும் நம்மை வாழ்க்கையின் வளர்ச்சி பாதையை நோக்கி நடத்தி செல்லும். இப்படியான நிலையில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் துலாம் ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் என்னென்ன பலன்களை பெறப்போகிறார்கள் என்பது பற்றி காணலாம். வரும் காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்கால பாதையை சரியாக அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. இந்த நேரத்தில் உங்களின் ஆளுமை திறன் அதிகரிப்பதோடு எதை செய்தால் வேலை நடக்கும் என்பதை நன்கு அறிந்து முயற்சிப்பீர்கள்.
குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதால் சிக்கல் ஏற்படாது. அதேசமயம் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது. குடும்பத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பு பற்றிய விஷயங்களை வரும் நாட்களில் தொடங்குவது மிக சிறப்பாக அமையும். அதே சமயம் நிறைவேற்றாமல் வைத்திருக்கும் கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றினால் அவற்றின் பலன்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ராசிக்கு சாதகமாக வரும் குருபகவான்
தடைப்பட்டு போன சுப காரியங்கள் விரைந்து வீட்டில் நடைபெறுவதற்கான காலம் கூடி வருகிறது. சொந்த பந்தங்கள் வீடு தேடி வரும் நிலைமை உண்டாகும். மே மாதம் 18ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நிலையில் குரு பகவான் ராசிக்கு சாதகமாக வருகிறார். இதனால் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற நிலையை உருவாக்க உள்ளது. நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் கடனை அடைக்கும் அளவுக்கு வருமானம் அதிகரிக்கும்.
இதுவரை வராமல் இருந்த பணம் கைக்கு வரும். சமூகத்தில் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நட்பு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்கும் நேரம் அமையும். குற்றம் பார்த்தால் சுற்றம் இருக்காது என்பதற்கு ஏற்ப உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது வாழ்க்கைக்கு வழிகாட்டுதலாக அமையும். எந்த வேலையையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே களத்தில் இருந்து செய்தால் விரைந்து முடியும்.
வாகனப் பழுது ஏற்படும் என்பதால் எப்போதும் அதில் கவனமாக இருப்பது நல்லது. சமூக வலைதள கணக்குகளை கவனமாக கையாளும் துலாம் ராசியினர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் எந்த விஷயத்திற்கும் பொறுப்பேற்று நடக்காதீர்கள். வெளியிடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். எந்த பிரச்சனையும் வந்தாலும் அதனை பக்குவத்தோடு எதிர்கொள்வீர்கள். மேலும் இதுவும் கடந்து போகும் என்ற ரீதியில் செயல்பட்டு அனைத்து விஷயங்களையும் வெற்றி காண்பீர்கள்.
இனிதான வாழ்க்கை அமையும்
துலாம் ராசியில் இருக்கும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை இனிதாக அமையும். கணவர் வழி சொந்தங்கள் மூலம் நற்பெயர் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். நகை, உடை உள்ளிட்டவை வாங்கும் சூழல் வரும். திருமணமாகாத பெண்களுக்கு மன தைரியம் அதிக அளவில் கிடைக்கும். காதல் விவகாரங்களில் இனிப்பான செய்தி வந்து சேரும். திருமண தடை இருப்பவர்களுக்கு விரைந்து வரன் கிடைக்கும். மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டினால் சிறப்பான வளர்ச்சியை அடையலாம்.
வியாபார பலன்கள்
வியாபாரத்தை பொருத்தவரை ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்தினால் முன்னேறலாம். கூட்டு தொழில் செய்தாலும் நல்ல வளர்ச்சி உண்டு .முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான காலம் வந்துவிட்டது. பங்குதாரர்களும் சரி, வேலையாட்களும் சரி பணி விஷயத்தில் உங்களுக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். பணியிடங்களில் நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். மற்ற நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்த்த சம்பளத்துடன் வாய்ப்புகள் தேடி வரலாம். சிந்தித்து செயல்படுவது நல்லது. புதியவற்றை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்தாலும் பழைய விஷயங்களையும் மறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
எந்த காரணம் கொண்டும் ஊழியர்களையும் மேலதிகாரியையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இந்த தமிழ் புத்தாண்டானது உங்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைவதோடு மட்டுமின்றி நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல எண்ணங்கள் நிறைவேறும் காலமாகவும் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த ஆன்மிக தகவல்கள் அனைத்தும் ஜோதிட நம்பிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)