Tamil New Year 2025: சாதகமான காலம்.. தனுசு ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!

2025 விசுவாசு வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு 11ம் இடத்தில் பிறப்பதால், விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சொந்தத் தொழிலில் லாபம், சொத்து பிரச்சினைகள் தீரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம், வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆனால், வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

Tamil New Year 2025: சாதகமான காலம்.. தனுசு ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!

தனுசு ராசி

Updated On: 

15 Apr 2025 11:54 AM

எதிரிகளை திக்கு முக்காட செய்ய வைப்பவர்களில் கெட்டிக்காரர்கள் தனுசு ராசியினர். இவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டான விசுவாவசு வருடம் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது பற்றி காணலாம். முதலில் இந்த ராசிக்கு 11 ஆம் ராசியில் தான் புத்தாண்டு பிறக்கிறது. அதனால் இதுவரை நீங்கள் நினைத்திருந்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் காலமாக அமையும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்ப்பது நல்லது. சொந்தமாக தொழில் செய்தால் அதில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தமாக வீடு அல்லது நகைகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சொத்து பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்படும். சகோதரர்கள் வழியில் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை இரவு நேர பயணங்களில் சரியான வழிகாட்டுதலுடன் செல்லவும். தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. அவர் வழியிலான சொத்துக்களில் சிக்கல்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். வெளியூரில் வேலை பார்த்தால் சொந்த ஊருக்கு செல்வதற்கான திட்டங்கள் தயாராகும்.

அனுசரித்து செல்வது நல்லது

மனைவி வழியிலான உறவினர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் எப்போதும் கண்காணிப்பு அவசியமாகிறது. குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மரியாதை கூடும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. சேமிப்பு ஓரளவு இருந்தாலும் வருமானத்தில் எந்தவித குறையும் இருக்காது.

நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்கில் நல்ல தீர்ப்பு சாதகமாக வரும். அக்கம் பக்கத்தினர் உடன் கருத்து முதலில் ஏற்பட்டாலும் அவை சுமுகமாக மாறி மகிழ்ச்சி பொங்கும். தேவையறிந்து உதவி செய்பவர்களை நட்பு வட்டத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்

பெண்களைப் பொருத்தவரை இதுவரை ஏற்பட்டிருந்த மன அழுத்தம், சோர்வு ஆகியவை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். தடைபட்டிருந்த திருமண பேச்சுக்கள் சமூகமாக நிறைவேறும். காதல் விவகாரங்களை கவனமாக கையாளுங்கள் அல்லது அதிலிருந்து விலகி எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டால் நல்லது. எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாத நபர்களிடம் பழகாதீர்கள்.

பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டால் முன்னேற்றம் இருக்கும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது  கவனமாக செயல்படுங்கள். படிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். வியாபாரத்தில் வரவு உயரும் நிலையில் போட்டி அதிகரிக்கவே செய்கிறது. எனினும் போட்டியாளர்களை கண்டு கவலைப்பட வேண்டாம். உங்களுக்கானது உங்களுக்கு வந்து சேரும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்தினால் வியாபாரம் பெருகும்.

பண விஷயத்தில் எப்போதும் சரியாக இருங்கள். கடன் கொடுப்பது வாங்குவதில் தெளிவாக முடிவெடுங்கள். வேலையாட்களை நம்பி பொறுப்புகளை முழுமையாக ஒப்படைக்க வேண்டாம். பணியிடங்களில் எதிர்பார்த்த பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், பணியிட மாற்றம் ஆகியவை .கிடைக்கும். அலுவலக சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களின் கடின உழைப்பு உரிய நபர்களால் புரிந்து கொள்ளப்படும், இதனை காரணம் காட்டி பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்.

வளர்ச்சிப் பாதைக்கான அடிப்படை தகுதிகள் கொண்டிருக்கும் நீங்கள் இந்த தமிழ் புத்தாண்டில் மேலும் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். தனுசு ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிலும் வெற்றி கிட்டும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(ஜோதிட தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரையானது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)