Tamil New Year: அனுபவமே சிறந்த வாழ்க்கை.. விருச்சிக ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!
2025 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு ராசி பலனில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் இல்லறத்தில் அமைதி, ஆரோக்கியத்தில் திருப்தி, சொந்த வீடு கட்டும் யோகம், பூர்வீகச் சொத்து பிரச்சனை தீர்வு, பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டால் (Tamil New Year 2025) தங்கள் வாழ்க்கையில் என்ன நன்மை நடக்கும் என 12 ராசிக்காரர்களும் காத்திருக்கின்றனர். அப்படியான நிலையில் விருச்சிக ராசிக்கான பலன்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.இந்த தமிழ் புத்தாண்டை தொடர்ந்து வரும் காலம் உங்களுக்கு அதிக செலவுகளை கொடுப்பதாக அமைந்தாலும் அவை யாவும் சுப செலவுகளாகவே இருக்கும். மே 14ஆம் தேதி அஷ்டமத்து குரு காலம் தொடங்குகிறது. இதன் காரணமாக பல விஷயங்களில் மாற்றம் உண்டாக்கலாம். குறிப்பாக இல்லறத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை இருந்தால் பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். சொந்த ஊரில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பூர்விக சொத்து பிரச்சனை தீர்வுக்கு வரும். சகோதரருடன் இணக்கமாக செயல்பட்டால் மிகவும் நல்லதாகும்.
ஊரார் மெச்சும்படி பிள்ளைகள் திருமணத்தை நடத்திக் காட்டுவீர்கள். ஊர் பிரச்சனைக்காக செல்கிறேன் என முந்திக்கொண்டு போகாதீர்கள். சில வாரங்களுக்கு தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தான் உண்டு தன் வேலையுண்டு இருந்தால் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் அமைதி நிலவும் நேரத்தில் பணவரவும் மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆனால் கொடுக்கல் வாங்கலில் எப்போதும் கவனமாக செயல்படுங்கள்.
அரவணைத்து செல்வது சிறந்தது
குடும்ப உறுப்பினர்களை அரவணைத்து செல்வதால் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த பிரச்சனை மாறி அதற்கான முடிவை தீர்க்கமாக எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். ராசிக்காரர்கள் தங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சரியாக கையாளவும்.
காலம் கனியும் போது திருமணம்
திருமணமான பெண்களை பொறுத்தவரை குடும்பத்தில் அவர்களின் சொல்லுக்கு மதிப்பு உயரும். கணவரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றி அன்பை பெறுவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு வரன் விரைந்து அமையும். எக்காரணம் கொண்டும் திருமணம் வேண்டாம் என தள்ளி போடாதீர்கள். காரணம் காலம் கனியும்போது எதையும் செய்வது நல்லது என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த வாய்ப்பு அமையும். படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்த மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்களை நிச்சயம் பெறுவார்கள்.
பெரிய முதலீடு வேண்டாம்
வியாபாரத்தை பொருத்தவரை லாபம் அதிகரிக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு எந்த பெரிய முதலீடுகளிலும் பணத்தை செலுத்த வேண்டாம். வேலையாட்களுடன் இணக்கமாக செல்வதால் தொழிலில் வளர்ச்சி உண்டாக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்களுடைய இடத்தை மாற்றும் சூழல் உண்டாக்கலாம். இது லாப நோக்கத்திற்கானது தவிர கவலைப்பட எதுவுமில்லை. உத்தியோகத்தை பொருத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவை எப்போதும் பெற்றவராக திகழ்வீர்கள்.
அவர்களே ஆச்சரியப்படும் வண்ணம் கடினமான வேலைகளில் விரைந்து முடித்து பாராட்டை பெறுவீர்கள். பணியிடங்களில் வேண்டிய இடத்திற்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும். இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லதாகும்.
இந்த தமிழ் புத்தாண்டு கடந்த காலங்களில் நீங்கள் கண்ட பல அனுபவங்கள் மூலம் மகத்தான வாழ்க்கை அமைய காரணமாக அமையும். முடிந்தவரை மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதுடன் மட்டுமல்லாமல் வீட்டிலும் பூஜை செய்து வந்தால் நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.