Tamil New Year 2025: வெற்றி உங்கள் வசமாகும்.. மகர ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆண்டாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Tamil New Year 2025: வெற்றி உங்கள் வசமாகும்.. மகர ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!

மகர ராசிக்கான பலன்கள்

Updated On: 

15 Apr 2025 11:54 AM

தவறான விஷயங்களுக்கு ஒரு போதும் துணை போகாத எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் மகர ராசிக்காரர்களுக்கு (Capricorn) இந்த தமிழ் புத்தாண்டானது (Tamil New Year) நேர்மறை எண்ணங்களால் நினைத்ததை சாதிக்கும் வருடமாக அமையும். இல்வாழ்க்கையை பொருத்தவரை கணவன், மனைவிக்குள் உறவு பலப்பட்டு மகிழ்ச்சி பொங்கும். இதுவரை சண்டை சச்சரவுகளால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். எக்காரணம் கொண்டும் உங்களுக்குள் பிரச்சனை நிகழ்த்தால் அதில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிள்ளைகளுடன் ஏற்படும் வீண் வாக்குவாதத்தை தவிர்த்தால் சுமூகமான சூழல் நிலவும். குழந்தைகளின் விருப்பங்களை கேட்டு இருந்து அவற்றை நிறைவேற்றவும்.

மகர ராசிக்காரர்கள் பொறுத்தவரை அவர்களுக்கு பணவரவு திருப்தியாக இருந்தாலும் அடிக்கடி வெளியில் கடன் வாங்கும் சூழல் உண்டாக்கும். வீண் விரைய செலவுகளை குறைப்பது மிகவும் நல்லது. ரத்த சொந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அதற்கான காலம் கனியும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பொதுவாகவே மகர ராசிக்காரர்கள் எதனையும் தனது முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவார்கள். அதுவே அவர்களின் பலமாக பார்க்கப்படுகிறது.

இழந்த செல்வாக்கை பெறுவீர்கள்

ஆகவே தன்னம்பிக்கை துளிர்விடும் இந்த காலகட்டத்தில் உறவுகள் மற்றும் பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அடிக்கடி மருத்துவ செலவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நலம் ஆரோக்கியம் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்கள் அனுசரித்து செல்வது நல்லது. எதற்காகவும்  அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பேச வேண்டாம். ஒவ்வொரு நாளும் பிரச்சினை வரும்போதும் உரிய வழிகளை கண்டுபிடித்து அதனை சமாளிப்பீர்கள்.

வெளி விஷயங்களில் தலையிட வேண்டாம். சண்டை மட்டுமே எதற்கும் தீர்வாக அமைந்து விடாது பக்குவமாக பேசி பிரச்சினையை தீர்ப்பது புத்திசாலித்தனமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நடைபெறுவதால் முன் கோபத்தை தவிருங்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். எந்த காரியத்தையும் தைரியத்துடன் அணுகினால் வெற்றிக்கட்டும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அனுசரித்து செல்லுங்கள்.

பெண்களைப் பொறுத்தவரை திருமணமானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். உங்களின் திறமைக்கான உண்மையான அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே பல்வேறு விதமான தொழில் முனைவோர் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பீர்கள். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு விரைவில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும் படிக்கும் பெண்களுக்கு இது சாதகமான நேரம் என்பதால் உங்களுடைய இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

தொழிலில் ஏற்படும் மாற்றங்கள்

வியாபாரத்தை பொருத்தவரை கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பழைய வேலையாட்களை மாற்றி விட்டு புது பணியாளர்களை சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். கடையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செயல்பட்டால் வளர்ச்சி அடைவீர்கள். பணியிடங்களில் ஏற்பட்டு வந்த பிரச்சனை நீங்கும். வேலை மாற்றம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய வேலைகளை மட்டும் சரியாக பார்த்துக் கொள்வது நல்லது.

இந்த தமிழ் புத்தாண்டு காலம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் அதனை எளிதாக கடந்து செல்பவர்கள் என்பதால் வெற்றி உங்களுடைய வசமாக அமையட்டும். மாதம் தோறும் காமாட்சி அம்மனை வழிபட்டு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

(ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)