Tamil New Year 2025: விசுவாவசு ஆண்டு பலன்கள்.. மேஷ ராசிக்காரர்கள் கவனத்திற்கு!
2025ஆம் ஆண்டு விசுவாசு ஆண்டாக தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. ராசிக்கு ஏழாவது இடத்தில் சந்திரன் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன்கள் குறையும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்து சமூக மக்களிடையே மிகப்பெரிய விசேஷ நாளாக பார்க்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு (Tamil New Year 2025) 2025ல் விசுவாவசு ஆண்டாக (Viswavasu) பிறக்கிறது. இப்படியான நிலையில் இந்த புது ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என பார்க்கலாம். யார் மனதும் புண்படும்படி நடக்க முயற்சிக்காத மேஷ ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் பல பலன்கள் கிடைக்கப்போகிறது. மேஷ ராசிக்கு ஏழாவது இடத்தில் சந்திரன் இருக்கும்போது தமிழ் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் இந்த காலகட்டத்தில் எடுக்கும் எந்த முயற்சிகளும் வெற்றி அடையும். இதுவரை முடிவடையாத வேலைகள் அனைத்தும் விரைந்து முடிவுக்கு வரும். ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எடுக்கும் மாறுபட்ட அணுகுமுறை காரணமாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் கூட தீரும். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த கருத்து வேறுபாடு அனைத்தும் நீங்கும்.
பிள்ளைகளின் வளர்ச்சியில் மாற்றம் உண்டாகும். வீட்டில் திருமணம் வளைகாப்பு உள்ளிட்ட சுப காரியங்கள் உருவாகி செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் நிலையில் வெளி மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுற்றியுள்ளவர்களிடையே மரியாதை கூடுவதோடு மட்டுமின்றி பொது பிரச்சினைகளில் தலையிட்டு சமரசம் காண முயற்சிப்பீர்கள். மே 18ஆம் தேதி மேஷ ராசிக்கு ராகு பகவான் லாப வீட்டிற்கு வருகை தருவதால் இதுவரை உள்ள கடனில் ஒரு பகுதி முடிவுக்கு வரும்.
உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை
வீட்டில் ஆண் குழந்தைகள் இருந்தால் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் கல்வி வாய்ப்பு அமையும். செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கும் நிலையில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் மத்தியில் உங்கள் ஆளுமை திறன் பாராட்டை பெறும். உங்களால் குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.மே 14 ஆம் தேதி முதல் 3ஆம் வீட்டுக்குள் குரு பகவான் செல்கிறார். இதன் காரணமாக முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறையுங்கள். மன ஆறுதல் ஏற்படும் என குடும்பத்தின் நிலவும் பிரச்சனைகளை மற்றவரிடம் சொன்னால் மேலும் பெரிதாகலாம்.
நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த குலதெய்வ கோயிலுக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும் புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும் சனிப்பார்வையின் சாதகம் இருப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் செலவுகள் மேலும் அதிகரிக்கும். சொன்ன சொல்வாக்கை காப்பாற்ற வேண்டும் என போராட வேண்டி இருக்கும் நிலை வரலாம். அதனால் யாரிடமும் வாக்கு அல்லது வீண் பேச்சு பேச வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்து அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபமும் வளர்ச்சியும் உண்டாகும். பணியிடங்களில் உள்ள சூழ்ச்சிகளை முறியடித்து மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மன உறுதியுடன் வெற்றி இலக்கை அடையும் காலமாக அமையும். முடிந்தவரை வாரத்தில் ஒரு நாளாவது விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் புண்ணியம் கிட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
(இந்த தொகுப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி தெரிவிக்கப்பட்டதாகும். இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)