ஒரே கர்ப்ப கிரகத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் .. இந்த கோயில் பற்றி தெரியுமா?
கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் ஒன்றாக அமைந்திருப்பதால் தனித்துவமானதாக தெரிகிறது. சைவ வைணவ ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் இக்கோயிலில், ஆஞ்சநேயர் சிவலிங்க வடிவில் அபிஷேகத்தின் போது காட்சி தருவது சிறப்பானதாகும்.

கெட்வெல் ஆஞ்சநேயர்
பொதுவாக நாம் எந்த செயல் செய்தாலும் அதனை விநாயகரை (Lord Vinayagar) வணங்கி தான் செல்வோம். ஆரம்பித்து வைப்பது கணபதி என்றால் அதனை முடித்து வைப்பது ஆஞ்சநேயர் (Lord Hanuman) என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதனை நிரூபிக்கும் பொருட்டு ஒரு கோயிலின் கர்ப்ப கிரகத்தில் விநாயகரும் ஆஞ்சநேயரும் பக்தர்களுக்கு ஒருங்கே காட்சி கொடுக்கின்றனர். இந்த கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கோயில் எங்கு இருக்கிறது என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.பொதுவாக ராமபிரானின் பக்தரான ஆஞ்சநேயர் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக, கடவுளாக அனைவராலும் வணங்கப்படுகிறார். ஆஞ்சநேயருக்கு என தனியான கோயில்கள் ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ளன. நாமக்கல், சென்னை நங்கநல்லூர் (Famous Hanuman Temples) போன்ற இடங்களில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் தான் இந்த விநாயகரும் ஆஞ்சநேயரும் ஒருகை அமைந்திருக்கும் நிகழ்வானது உள்ளது. இந்த கோயில் ஆனது காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் கெட்வெல் ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார்.
சிவலிங்க வடிவில் ஆஞ்சநேயர்
ராமாயணத்தில் சிவபெருமானின் அம்சம் தான் ஆஞ்சநேயர் என சொல்வார்கள். இதன் அடிப்படையில் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இங்கு சிவனை நினைத்து வழிபட்டால் ஆஞ்சநேயர் தெரிய மாட்டார் ஆஞ்சநேயரை நினைத்தால் சிவன் தெரிய மாட்டார். இந்த அதிசயத்தை கண்கூடாக அபிஷேகத்தின் போது நம்மால் பார்க்க இயலும். அபிஷேகத்தின் போது சிவ சொருவமாக இருக்கும் ஆஞ்சநேயர் அலங்காரம் செய்யும் போது விஷ்ணு சொற்பமாக மாறுகிறார். இவரது வலது கண்ணில் சூரியன் மற்றும் இடது கண்ணில் சந்திரன் ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது.
எப்படி குழந்தை, கடல், மழை, நிலவு, இறைவன் என அனைவரையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது. அதேபோல் கெட் வெல் ஆஞ்சநேயரை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு அலுப்பே தட்டாது. இவரை தரிசிக்க வாரந்தோறும் வரும் பக்தர்கள் ஏராளமானோர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை என நம்பப்படுகிறது. அந்த மலையை பார்த்தபடி இருக்கும் ஆஞ்சநேயருக்கு எட்டு பேர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
அதில் ஒருவர் எமன். அவருக்கு அனுக்கிரகம் புரிய தென் திசையை நோக்கி ஆஞ்சநேயரின் திருப்பாதம் வட திசையை நோக்கி வாள் வாலின் நுனியில் நவகிரகம் என அமைப்பே ஓர் ஓம்கார வடிவில் இருக்கும். கெட் வெல் ஆஞ்சநேயரை வணங்கினால் செல்வ செழிப்பு, மரண பயம் நீங்குதல், கல்வி, பக்தி, குடும்ப ஒற்றுமை, உத்தியோகத்தில் உயர்வு ஆகியவை கிடைக்கும் என்பதை நம்பிக்கையாகும். கெட்வெல் என்ற மருத்துவமனை வளாகத்தில் இந்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளதால் இந்த ஆஞ்சநேயர் கெட்வெல் ஆஞ்சநேயர் என அழைக்கப்பட்டு வருகிறார்.
(இணையத்தில் உலா வரும் தகவல்கள், ஆன்மிக அன்பர்களின் கருத்துகள் அடிப்படையில் இந்த கோயில் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)