Tamilisai Soundararajan: வாரத்தில் 5 நாட்கள் கோயில் தான்.. தமிழிசை பகிரும் ஆன்மிக அனுபவங்கள்!

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் நேர்காணல் ஒன்றில், இறை நம்பிக்கையின் முக்கியத்துவம், அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தின் பங்கு, குலதெய்வ வழிபாடு மற்றும் கடவுள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார்.

Tamilisai Soundararajan: வாரத்தில் 5 நாட்கள் கோயில் தான்.. தமிழிசை பகிரும் ஆன்மிக அனுபவங்கள்!

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On: 

28 Mar 2025 05:53 AM

தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத பெண் ஆளுமைகளில் ஒருவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan). தமிழ்நாடு பாஜக (BJP)வின் முன்னாள் தலைவர்,தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் தனது ஆன்மிக அனுபவங்களைப் (Spiritual Experience) பற்றி ஐபிசி பக்தி சேனலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம். அதாவது, “பக்தி இல்லை என்றால் சக்தி கிடைக்காது என்பது என்னுடைய நம்பிக்கையாகும். இறைவனுடைய ஆசிர்வாதம் இல்லாமல் ஒரு அடி கூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. ஒவ்வொரு நொடியும் இறைவனின் ஆசிர்வாதம் இருப்பதாகத்தான் நான் நம்புகிறேன். அதனால் நான் எந்த விஷயத்திலும் அதிகமாக டென்ஷன் ஆக மாட்டேன். இன்றைக்கு இறைவன் எனக்கு என்ன முடிவு செய்து இருக்கிறாரோ அதற்கு அவரே அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு இருப்பேன். அதற்காக என்னுடைய உழைப்பை விட்டு விடுவேன் என்பது அர்த்தமில்லை. கடுமையான உழைப்பு மற்றும் முயற்சி என எல்லாமே இருக்கும் பட்சத்தில் கூடுதலாக இறைசக்தியும் இருக்கும் என்பது நம்பிக்கையாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் நிறைய தருணங்களில் இறைசக்தி என்னுடன் இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். உதாரணமாக நான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றால் வழியில் டிராபிக் ஜாம் ஆகிவிடும். என்னுடன் இருப்பவர்கள் டென்ஷனாகி விடுவார்கள். ஆனால் நான் 10.30 க்கு செல்ல வேண்டிய நிகழ்ச்சியில் 11 மணிக்கு தான் செல்வேன் என இறைவன் முடிவு செய்து விட்டதாக நினைத்துக் கொள்வேன்.

அந்த நிகழ்ச்சிக்கு சென்று பார்த்தால் ஏன் தாமதமாக வந்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதேபோல் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி, மனதுக்கு ஒத்துப் போகாவிட்டால் செய்ய மாட்டேன். அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இருக்காது. இறைவன் உடனிருந்து என்னை வழிநடத்துவதாக நினைத்துக் கொள்வேன்” என தமிழிசை கூறினார்.

குலதெய்வம் பற்றி தமிழிசை

ஆன்மீகத்தைப் பொறுத்தவரை என்னுடைய அலுவலகத்தில் பெரியபுராணம் புத்தகம் இருக்கும். அதேபோல் சிவனுக்கு பணிவிடை செய்த அனைத்து நாயன்மார்களையும் எனக்கு பிடிக்கும். அதேபோல் ஆழ்வார்களும் பிடிக்கும். அதேசமயம் அந்த காலத்திலேயே பெண்களுக்காக இவ்வளவு பாடல்களை பாடிய ஆண்டாளை ரொம்ப பிடிக்கும்.

என்னுடைய குலதெய்வம் பெயர் பெரியசாமி. திருப்பூர் அருகே வல்லிபுரம் என்ற ஊரில் உள்ளது. அந்தக் கோயிலில் சப்த கன்னிகள், குதிரையில் இருக்கும் அய்யனார் இருக்கிறது. கிராம மக்களுக்கு எல்லைகளில் அமைந்துள்ள அய்யனார் கொடுக்கிற தன்னம்பிக்கை, பாதுகாப்பு ஆகியவற்றை வேறு எந்த கடவுளும் கொடுக்க முடியாது.

மறக்க முடியாத சம்பவம்

நான் கனடா நாட்டில் படிக்கும்போது அங்கு ஒவ்வொரு தெரு மூலையிலும் ஒரு கவுன்சிலிங் சென்டர் இருக்கும். இதை நான் உடன்படிப்பவர்களிடம் ஆச்சரியமாக கேட்பேன். அதற்கு அவர்கள் இங்கு தேவை அதிகமாக இருப்பதால் இத்தகைய சென்டர்கள் இருப்பதாக கூறுவார்கள். உங்கள் ஊரில் இது போன்று இல்லையா என என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு எங்கள் ஊரில் ஒவ்வொரு திரு மூலையிலும் கோயில்கள் இருக்கும் என சொன்னேன். அதுதான் எங்களுடைய கவுன்சிலிங் சென்டர் எனவும் கூறினேன். மனதில் இருக்கும் அத்தனை கஷ்டங்களையும் கோயிலுக்கு சென்று கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்து விட்டால் அதன் பிறகு மனம் இலகுவாகிவிடும். அதனால் கவுன்சிலிங் சென்டர் சென்று அதனை சரி செய்ய வேண்டியது இல்லை என சக நண்பர்களிடம் தெரிவித்தேன்.

வாரத்தில் 5 நாட்கள் கோயில்

நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்கு செல்வேன்.. திங்கட்கிழமை விநாயகர் மற்றும் சிவன் கோயிலுக்கு செல்வேன்.. செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவேன். புதன்கிழமை பெரும்பாலும் எங்கும் செல்ல மாட்டேன். வியாழக்கிழமை தோறும் குரு பகவான் மற்றும் வடிவுடையம்மன் கோயிலுக்கு செல்வேன். வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கு செல்வேன். முடிந்தளவு முப்பாத்தம்மன் கோயிலுக்கு போவேன். அதேபோல் சனிக்கிழமை பெருமாள் மற்றும் அனுமார் கோயிலுக்கு செல்வேன்.