வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?
இந்து மதத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு முதல் சனிக்கிழமை வரையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தெய்வங்களை வழிபடுவதால் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் நல்வாழ்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற வழிபாட்டு முறைகளையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

இறை வழிபாடு (God Worship) என்பது வாழ்க்கையில் மிக முக்கியம் என சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் கடவுளைப் பற்றிய வெவ்வேறு விதமான கருத்துகள் இருக்கும். கடவுளை உணர்தல் என்பது அனைவருமிடையே மாறுபடும். சிலருக்கு கடவுளை வணங்குதல் என்பது சிறிய விஷயமாகவும், சிலருக்கு பெரிய விஷயமாகவும் தோன்றலாம். ஆனால் வாழ்க்கையில் கடவுள் வழிபாடு என்பது அமைதி, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றை அளிக்கும் என பலரும் இன்றளவும் நம்புகிறார்கள். இந்து மதத்தில் (Hindu Religion) பல்வேறு வகையான இதிகாசங்களின் அடிப்படையில் கடவுள்கள் அவதரித்துள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பண்பு நலன்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் வாரத்தின் 7 நாட்கள் உள்ள நிலையில் நாம் எந்த நாட்களில் எந்த கடவுளை வழிபட்டால் சிறப்பு என்பது பற்றிப் பார்க்கலாம்.
- இந்து மதத்தை பொறுத்தவரை திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. அவர் முழு முதற்கடவுளாகக் கருதப்படுகிறார். அதேசமயம் திங்கட்கிழமை சோமாவாரம் என அழைக்கப்படுகிறது. அந்நாளில் சிவபெருமான் சிறப்பு அபிஷேகங்களுடன் வழிபடப்படுகிறார். மேலும் பக்தர்கள் திங்கட்கிழமையில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேக பொருட்கள் வழங்கி வழிபட்டால் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
- செவ்வாய்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்நாள் அம்மனுக்கு மிகவும் உகந்த தினம் என சொல்லப்படும் அதே வேளையில் அனுமனுக்கும் விசேஷமானது. செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடுவது, வாழ்க்கையில் உள்ள பயங்கள், தடைகள் மற்றும் எதிர்மறை சக்திகளை நீக்க உதவும் என்று நம்பப்படுகிறது. முடிந்தவரை வீட்டில் அல்லது அனுமன் கோயிலுக்கு வழிபடுபது பலன்களைக் கொடுப்பதாக நம்பப்படுகிறது.
- பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என சொல்வார்கள். அத்தகைய தினமானது விநாயகருக்கு உகந்த நாளாக கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதனால் ஞானம் மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவை கிடைக்கும் என கருதப்படுகிறது. வீட்டில் மட்டுமல்லாமல் எந்த காரியம் எடுத்தாலும் வழியில் விநாயகர் இருந்தால் வணங்கி செல்லுங்கள். நீங்கள் முயற்சிக்கும் எந்தவொரு விஷயமும் வெற்றி பெறும். வாழ்க்கையிலிருந்து தடைகளை நீக்க விநாயகர் வழிபாடு முக்கியமானது.
- வியாழக்கிழமை விஷ்ணு பகவானுக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. அவர் தன்னை வழிபடுபவர்களுக்கு நல்லிணக்கம், நிலைத்தன்மை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையை காட்டுகிறார். இந்த நாளில் மக்கள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரித்து இறைவனை மனநிறைவு செய்யுங்கள்.
- வெள்ளிக்கிழமை மக்களிடையே நல்ல நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் பெண் தெய்வங்களை வணங்கினால் மிகப்பெரிய பலன்களைப் பெறலாம் என நம்பப்படுகிறது. மக்கள் அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பெண் தெய்வங்கள் அளவில்லாமல் ஆசீர்வதிப்பதாக ஐதீகமாக பார்க்கிறார்கள்.
- சனிக்கிழமை நாள் என்றாலே அது சனிபகவானுக்குரியது தான். இந்நாளில் பெருமாளையும் வழிபடுகிறார்கள். ஆனால் கோயில்களில் நவக்கிரக சன்னதியில் வழிபட்டு எள் தீபம் ஏற்றினால் சனி பகவானை குளிர்விக்கலாம் என நம்பப்படுகிறது.
-
(இந்த தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)