Athiri Malai Temple: ஆன்மீக பயணம்.. பலரும் அறியாத “அத்ரி மலை” சிறப்புகள்!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அத்ரி மலை, அனுசுயா தேவி சமேத அக்ரி பரமேஸ்வரர் கோயிலுக்குப் பிரசித்தி பெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த இம்மலையை அடைய, கடனா நதி அணையைக் கடந்து காட்டுப்பாதை வழியாகச் செல்ல வேண்டும். இப்பயணம் சுமார் 2-3 மணி நேரம் எடுக்கும். ஆற்றுக்குளியல், சுண்ணாம்பு குகைகள் போன்ற இயற்கை அழகுகளையும் இங்கு காணலாம்.

அத்ரி மலை
பொதுவாக பயணம் செய்வது என்பது பலருக்கும் பிடித்தமானது. பயணங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக இருக்கலாம். அந்த வகையில் ஆன்மீகப் பயணம் செல்வது என்பது எப்போதும் மனதிற்கு இதமளிக்ககூடியதாகவே அமையும். தமிழ்நாட்டில் இத்தகைய பயணங்களை மேற்கொள்வதற்கு என பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் (Tenkasi District) ஆழ்வார்குறிச்சி அருகே இருக்கும் அத்ரி மலை (Athri Malai) பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த அத்ரி மலையில் அனுசுயா தேவி சமேத அக்ரி பரமேஸ்வரர் கோயில் உள்ளது. அத்திரி என்னும் மகரிஷி வாழ்ந்த இடம் என்பதால் இது அத்ரிமலை என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த மலைக்கு யாத்திரை செல்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த இடம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒரு பகுதியாகும்.கடனா நதி என்ற அணையை கடந்து காட்டுப்பாதைகள் வழியாக இந்த அத்ரி மலை பயணத்தை நாம் தொடரலாம். இந்த அத்திரி மலை பயணம் தொடர்ச்சியாக நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு 2 மணி நேரமும், முதல் முறையாக செல்பவர்களுக்கு மூன்று மணி நேரத்திலும் முடிவடையும்.
புத்துணர்ச்சி அடைய செய்யும் ஆற்றுக்குளியல்
அணைப்பகுதியை கடந்தால் அடுத்ததாக ஆற்றுப்பகுதி நம்மை வரவேற்கும். பெரிதாக ஆழமில்லாத அந்த ஆறு நம்மை புத்துணர்ச்சி அடைய செய்யும் வகையில் இருக்கும். உண்மையில் அத்திரி மலையில் இருந்து சுற்றிலும் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகும் தென் மாவட்டமான தென்காசியின் ரம்யமான சுற்றுச்சூழலும் நம்மை கொள்ளை கொள்ளும்.
இந்த மலை பயணத்தின் போது வழியில் நீங்கள் சுண்ணாம்பு குகைகளை காணலாம். சித்த மருத்துவத்தின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவராக திகழ்ந்த கோரக்கர் முனிவர் இந்த குகைகளில் தியானம் மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி சென்றதாக சொல்லப்படுகிறது.
எப்படி செல்லலாம்?
அம்பாசமுத்திரம் அருகே அமைந்திருக்கும் இந்த ஆழ்வார்குறிச்சிக்கு நாம் பேருந்து மற்றும் ரயில் மூலமாக செல்லலாம். ஆழ்வார்குறிச்சியில் இருந்து கடனா நதி அணை சரியாக பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழியெங்கும் வயல்வெளிகள் நிறைந்த அந்த சாலையில் செல்லும்போதே மனதிற்குள் ஒரு பாசிட்டிவான எண்ணங்கள் தோன்றும்.
அது மட்டுமல்லாமல் வறண்ட காலங்களில் கடனாநதி அணை வழியாகவே நாம் அத்திரி மலை மலையேற்ற பாதையை அடையலாம். மழைக்காலங்களில் அணை நிரம்பும் போது அடர்ந்த காடுகளின் வழியாக கல் நதியை கடந்து நாம் மலையேற்ற பாதையை அடையலாம். இப்பகுதியை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் யானை, சிறுத்தை, மிளா போன்ற உயிரினங்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.
கவனம் தேவை
தென்னகத்தின் கங்கை என அழைக்கப்படும் கடனாநதி இன்றும் செழிப்பான இடமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கிருக்கும் அமிர்தவர்ஷினி என்ற மரத்திலிருந்து சித்திரை மாதத்தின் முதல் ஐந்து நாட்களும், பங்குனி நாம் மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும், பன்னீர் மழை பொழியும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது.
அத்ரி மலையின் உச்சிக்கு சென்றால் அங்கு அத்ரி மகரிஷி அனுசுயா தேவி திருக்கோயில் உள்ளது. இங்கு கோரக்க முனிவருக்கும் சன்னதி உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. வனத்துறையினரின் முறையான அனுமதி பெற்று இந்த கோவிலுக்கு சென்று நாம் சாமி தரிசனம் செய்யலாம்.
அத்ரி மலைக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் சென்று வர முடியும். சிறு சிறு குழுக்களாக செல்ல வேண்டுமே தவிர தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்கள், கேமராக்கள், வெடி சம்பந்தப்பட்ட பொருள் மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மலையேறும் போது கரடு முரடான பாதைகளில் கற்கள், முட்கள் நிறைந்திருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த உடை மற்றும் காலணிகளை அணிந்து செல்வது நல்லது. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.