Thirupparankundram: அமர்ந்த நிலையில் முருகன்.. திருப்பரங்குன்றம் சிறப்புகள் தெரிஞ்சுகோங்க!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது. சுப்பிரமணிய சுவாமி மூலவராகவும், தெய்வானை அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த பின், தெய்வானையை மணந்த முருகன் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயில் குடைவரை கோயிலாகும்.

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு (Lord Murugan) கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். கடவுள்களின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடு இருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிவன் – பார்வதியின் இரண்டாம் மைந்ததான முருகன் வயது வித்தியாசம் இல்லாமல் பக்தர்கள் இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டின் மதுரை (Madurai) மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் (Thirupparankundram) அமைந்திருக்கும் முருகனின் அறுபடை வீட்டின் முதலாவது வீட்டைப் பற்றிக் காணலாம்.
இந்தக் கோயிலில் மூலவராக சுப்பிரமணிய சுவாமியும், உற்சவராக சண்முகம், அம்மனாக தெய்வானையும் அருள்பாலிக்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் புராண பெயர் தென்பரங்குன்றம் ஆகும். இந்தக் கோயில் காலை 5:30 முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலையில் நான்கு மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்குமாறு தேவர்கள் சிவனை வேண்டினார்கள். அதற்கு சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கிய நிலையில் அதிலிருந்து ஆறுமுகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி தன்னுடைய வாகனமாக வைத்துக் கொண்டார். முருகன் சூரனை வதம் செய்த நிகழ்வு திருச்செந்தூர் கோயிலில் நிகழ்ந்தது.
மாபெரும் வெற்றி பெற்ற முருகனுக்கு இந்திரன் தனது மகளான தெய்வானையை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. இந்த திருமணத்தில் அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் பங்கு கொண்டனர். நாரதர் முன்னிலையில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி திருமண கோலத்தில் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினார். அவருக்கு சுப்பிரமணிய சுவாமி என பெயர் சூட்டப்பட்டது.
கோயிலின் சிறப்புகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் முருகன் தெய்வானையை மணமுடித்த நிலையில் அமர்ந்த காலத்தில் காட்சியளிக்கிறார். மற்ற அறுபடை வீடுகளில் அவர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவரின் அருகில் இந்திரன், பிரம்மா, நாரதர், வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி, சூரியன், சந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். மேலும் யானை,ஆடு, மயில் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடைவரை கோயில் என்பதால் இங்கு அபிஷேகம் கிடையாது. அவரிடம் இருக்கும் வேலுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். குறிப்பாக புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் மலை மீது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இந்த வேல் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சூரனை வதம் செய்து அந்த வேலுடன் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்ததால் இந்த கோயிலில் வேலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வெள்ளை மயில்கள்
சிவனை எதிர்த்து வாதம் செய்த நக்கீரர் தனது பாவம் நீங்குவதற்காக திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். மேலும் சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் கோயிலில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என ஒவ்வொரு கடவுளுக்குரிய வாகனங்கள்தான் கோயில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் திருப்பரங்குன்றத்தில் உள்ள கொடி மரத்திற்கு அருகில் சிவன், விநாயகர், முருகனுக்கு வாகனங்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடாழ்வார் இவைகளுக்கு எதிரே வணங்கியபடி இருப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் முருகனின் வாகனமாக அறியப்படும் மயிலை நாம் அறுபடை வீடுகளில் சகஜமாக காணலாம் என்றாலும் திருப்பரங்குன்றத்தில் வெள்ளை மயில்கள் அதிகமாக இருக்கும். திருப்பரங்குன்றத்தை பொருத்தவரை திருவிழாக்களின் போது அங்கிருக்கும் சிவன் சன்னதியில் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனால் முருகப்பெருமான்தான் வீதி உலா சொல்கிறார் முருகன் சிவ அம்சமானவர் என சொல்லப்படுவதால் இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது இங்கிருக்கும் முருகனுக்கு சோமசுப்பிரமணியர் என்ற பெயரும் உள்ளது.
கோயில் திருவிழாக்கள்
இந்த கோயிலில் ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், புரட்டாசியில் வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோயிலில் இடம்பெற்றிருக்கும் துர்க்கை அம்மனை திருமண மற்றும் பிற தோஷங்கள் உள்ளவர்கள் ராகு காலத்தில் வந்து வேண்டிக் கொண்டால் அவை நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் முருகனுக்கு உரிய பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற்றுவது இந்த கோயிலில் இருந்தாலும் பெரும்பாலானோர் அன்னதானம் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல ரயில், பேருந்து வசதி அடிக்கடி உள்ளதால் வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.