Rock Salt Lamp: உப்பு தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. இதைப் படிங்க!
சமீபகாலமாக ஆன்மிக அன்பர்களிடையே உப்பு தீபம் ஏற்றுவது அதிகரித்து வருகிறது. இதனால் மகாலட்சுமி அருள் பெறவும், எதிர்மறை சக்திகளை நீக்கவும் முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாட்களில் ஏற்றுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இதன் சிறப்புகள் பற்றி காணலாம்.

தீபத்தின் (Lamp Light) அடிப்படை கோட்பாடு நம்முடைய வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிரச் செய்வதே ஆகும். தீபம் ஏற்றி வழிபடுகையில், நாம் எத்தகைய மனநிலையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கை (Confidence) பிறக்கும் என்பதை அனைவரும் உணர்ந்திருப்போம். தீபம் நல்லெண்ணெய், விளக்கு எண்ணெய், நெய் ஆகியவை துணைக் கொண்டு ஏற்றப்படுகிறது. இப்படியான நிலையில் பலரும் உப்பு தீபம் (Rock Salt Diya) ஏற்றி வழிபட்டு வருவது அதிகரித்துள்ளது. பொதுவாக வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாளில் ஏற்றப்படும் இந்த உப்பு தீபம் மிகப்பெரிய நன்மைகளை தருவதாக நம்பப்படுகிறது. அப்படியான இந்த தீபத்தின் சிறப்புகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது பற்றி நாம் காணலாம்.
பொதுவாக உப்பு என்பது மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனை ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் பலருக்கும் எதற்காக உப்பு தீபம் ஏற்றுகிறோம் என தெரிவதில்லை. மேலே குறிப்பிட்டு போல இரண்டு தினங்கள் மட்டும் தான் உப்பு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மற்ற நாள்களை தவிர்ப்பது நல்லது. மேலும் கோயில்களில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கோபுரத்தில் வைத்திருப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு வைப்பதால் மக்களுக்கான பிணிகள் தீரும் என நம்பப்படுகிறது.
பௌர்ணமி நாட்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்வதால் தொழிலில் தடை, வருமானப் பற்றாக்குறை, பதவி உயர்வு கிடைப்பதில் இருக்கும் சிக்கல் உள்ளிட்டவை நீங்கும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எதிர்பார்த்த வேலை, அலுவலகத்தில் பதவி மாற்றம் ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. நீண்ட நாட்களாக மனதில் நினைத்த விஷயம் தடைப்பட்டு கொண்டிருந்தால் 48 நாட்களுக்கு உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
உப்பு தீபம் ஏற்றுவது எப்படி?
ஒரு சிறிய தாம்பூல தட்டில் முழுவதுமாக கல் உப்பை பரப்ப வேண்டும். அதன் மேல் புதிதாக வாங்கி வைத்த அகல் விளக்கு ஒன்றை வைக்க வேண்டும் பஞ்சு திரி மற்றும் விளக்கேற்றுவதற்காக நெய் விளக்கு, எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஏதேனும் ஒன்றை எடுத்து ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபமாகும். இந்த தீபமானது மிகவும் சக்தி வாய்ந்தது என சொல்லப்படுகிறது. இந்த தீபமானது வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.
நீங்கள் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையிலும் இந்த வழிபாட்டை கடைபிடிக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக தட்டில் உள்ள கல் உப்பை மாற்ற வேண்டும். இந்த தீபத்தால் வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகள் நீங்கி பாசிட்டிவ் எண்ணங்கள் பெருகும் என நம்பப்படுகிறது. பகைவர்கள் தொல்லை நீங்கவும் எதிரிகளுக்கு குடைச்சல் கொடுக்கவும் வெள்ளிக்கிழமை தோறும் உப்பு தீப வழிபாடு மேற்கொள்ளலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் மனதில் பலி உணர்வு வைத்துக் கொண்டு இந்த வேண்டுதலை நிறைவேற்ற கூடாது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அறிவியல் விளக்கமும் இல்லை)